மத்திய அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன் மீது காலணி வீசிய விடயம் தமிழகத்தின் பெருமையை சீர்குலைக்கும் செயல் எனவும் இதற்கு தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் தமிழக சட்டமன்ற எதிர்கட்சி தலைவரும் தி.மு.க.வின் செயல் தலைவருமான மு.க ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
தற்கொலை செய்து கொண்டாதாக தெரிவிக்கப்படும் மாணவன் முத்துகிருஷ்ணனி அஞ்சலி நிகழ்வில் கலந்து கொள்ளச் சென்ற மத்திய அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன் மீது இனம் தெரியாத நபர்கள் காலணி வீசி தாக்குதல் நடத்தி இருந்தனர். குறித்த சம்பவம் தொடர்பில் மு.க ஸ்டாலின் விடுத்துள்ள அறிக்கையிலேயே இவ்வாறு குறிப்பிடப்பட்டுள்ளது.
முத்துகிருஷ்ணனின் உடல் வைக்கப்பட்டிருந்த இடத்தில் பொலிஸார் பாதுகாப்பில் இருந்த நிலையிலும் குறித்த காலணி தாக்குதல் இடம்பெற்றுள்ளதாகவும் அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.
கடந்த காலங்களுடன் ஒப்பிடும் போது பொலிஸாரின் திறமைகள் குறைந்து வருவதாகவும் ஸ்கொட்லாந்து பொலிஸாருக்கு இணையாக தமிழக பொலிஸாரை தான் கணித்ததாகவும் அவர் தனது அறிக்கையில் மேலும் சுட்டிக்காட்டியிருந்தார்.
அத்துடன் இனிவரும் காலங்களிலும் இது போன்ற தவறு நடக்காமல் இருக்க பொறுப்பும் கடமையும் உள்ள பொலிஸார் நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் அந்த அறிக்கையில் வேண்டுகோள் விடுத்துள்ளார்.