நாட்டின் அபிவிருத்திச் செயற்பாடுகளை வினைத்திறனாகவும் முறையாகவும் முன்னெடுக்க, ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன அரச அதிகாரிகளுக்கு ஆலோசனை வழங்கியுள்ளார்.
மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுக்கூட்டம், பிரதேச ஒருங்கிணைப்பு குழுக்கூட்டம், அமைச்சுக்களினதும், திணைக்களங்களினதும் முன்னேற்ற மீளாய்வு கூட்டம் என்பவற்றை நடத்துவதன் மூலம், நாட்டின் அபிவிருத்திச் செயற்பாடுகளை வினைத்திறனாகவும் முறையாகவும் முன்னெடுக்கமுடியும் ஜனாதிபதி குறிப்பிட்டுள்ளார்.
கொழும்பு தாமரைத்தடாக கலையரங்கில் நேற்று முற்பகல் நடைபெற்ற இலங்கை நிர்வாக சேவை சங்கத்தின் 34ஆவது ஆண்டிற்கான வருடாந்த ஒன்றுகூடலில் கலந்துகொண்டு உரையாற்றும்போதே, ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன குறித்த ஆலோசனையை அரச அதிகாரிகளுக்கு வழங்கினார்.
அங்கு தொடர்ந்து கருத்து தெரிவித்த அவர்,
“தகவல் அறியும் சட்டமும், கணக்காய்வு சட்டமும் நாட்டின் அரச சேவையிலும், அரச நிதி முகாமைத்துவத்திலும் மாற்றத்தை ஏற்படுத்தக்கூடிய இரு சந்தர்ப்பங்களாகும்.
தற்போதைய அரசாங்கம் ஆட்சிக்கு வந்ததன் பின்னர் நாட்டின் அரசியலிலும் அரச சேவை உள்ளிட்ட அனைத்து துறைகளிலும் வெளிப்படைத் தன்மை மற்றும் ஒழுக்கம் என்பவற்றை ஏற்படுத்துவதற்கான விதிமுறைகளும், சட்டங்களும் ஏற்படுத்தப்பட்டு வருவதுடன் அவற்றுள் சில எதிர்காலத்தில் நடைமுறைப்படுத்துவதற்கும் உத்தேசிக்கப்பட்டுள்ளன.
நாட்டின் அரச சேவையில் போன்றே ஏனைய துறைகளிலும் ஏற்பட்டுவரும் இந்த மாற்றமானது பொதுமக்களின் சுதந்திரம் மற்றும் ஜனநாயகத்திற்கு மதிப்பளிக்கும் சமூகத்தின் நிலவுகைக்கு அவசியமான அம்சமாகும்.
அபிவிருத்தி செயற்பாடுகளின்போது அரசியல்வாதிகளுக்கும் அரச அதிகாரிகளுக்கும் இடையில் காணப்பட வேண்டிய தொடர்பில் ஏற்படும் குறைவானது, நாட்டின் அபிவிருத்திக் குறிக்கோள்களில் பின்னடைவை ஏற்படுத்தும் என அவர் மேலும் தெரிவித்துள்ளார்.