இன்னமும் பேச்சுவார்த்தை மட்டத்தில் இருக்கும் புதிய அரசியலமைப்புச் சட்டம் தொடர்பான கருத்துக்கள் குறித்து தவறான நிலைப்பாட்டுக்கு வந்து நாடு பிரிக்கப்பட போவதாகவோ கூற வேண்டாம் என பிரதமர் ரணில் விக்ரமசிங்க ஊடகங்களிடம் கேட்டுக்கொண்டுள்ளார்.
நாட்டில் உள்ள பிரச்சினைகளை தீர்ப்பதற்கான முக்கிய இடத்திற்குள் வந்துள்ள இந்த சந்தர்ப்பத்தில், அரசியல் தீர்வு நோக்கிய பயணத்திற்கு ஊடகவியலாளர்கள் முழுமையான ஒத்துழைப்பை வழங்க வேண்டும் எனவும் அவர் கேட்டுக்கொண்டுள்ளார்.
கொழும்பில் அஞ்சல் திணைக்களத்தின் தலைமையக கேட்போர் கூடத்தில் நேற்று நடைபெற்ற நூல் வெளியீட்டு நிகழ்வில் உரையாற்றும் போதே பிரதமர் இதனை கூறியுள்ளார்.
நாம் அனைவரும் ஒன்றாக இணைந்து பொது வேட்பாளராக மைத்திரிபால சிறிசேனவை தெரிவு செய்து ஜனாதிபதியாக பதவிக்கு கொண்டு வந்ததன் காரணமாக ஊடகவியலாளர்களுக்கு சுதந்திரமாக தமது கருத்துக்களை எழுதும் வாய்ப்பு கிடைத்துள்ளது.
இந்த சுதந்திரம் காரணமாகவே அன்று மகிந்த ராஜபக்சவை பாதுகாத்தவர்கள் தற்போது நாடு பிளவுப்படும், நாட்டை பிரிக்க போகிறார்கள், சிங்கள இனம் அழிய போகிறது என்று கூறுகின்றனர். இந்த சுதந்திரம் இல்லாதிருந்தால் அவர்களால் இப்படி பேச முடியாது.
கடந்த காலத்தில் ஊடக சுதந்திரத்தை பாதுகாக்க முயற்சித்த சிங்கள, தமிழ் உட்பட பல ஊடகவியலாளரின் கொல்லப்பட்டனர். சில ஊடகவியலாளர்கள் நாட்டை விட்டு சென்றனர்.
தனிநாட்டை உருவாக்க அன்று தமிழ் ஊடகவியலாளர்கள் போராடவில்லை. அவர்கள் தமிழர்களின் உரிமைகளுக்காக போராடினர்.
இந்த உரிமைகளை வழங்க சிங்கள மக்கள் இணங்கவோ இணங்காமலோ போகலாம். தமிழ் ஊடகவியலாளர்கள் ஊடக சுதந்திரத்திற்காகவும் போராடினர்.
ஊடக சுதந்திரத்திற்காக போராடிய சிங்கள, தமிழ், முஸ்லிம் ஊடகவியலாளர்களை நாம் நினைவுகூர வேண்டும். அவர்கள் தமது உயிர்களை தியாகம் செய்ததால் தற்போது நமக்கு ஊடக சுதந்திரம் கிடைத்துள்ளது. சில தமிழர்களுக்கு இந்த சுதந்திரத்தை அனுபவிக்க இன்னும் சந்தர்ப்பம் கிடைக்கவில்லை.
யாழ்ப்பாணத்தில் சில தமிழர்களுக்கு அவர்களின் காணிகள் இன்னும் கிடைக்கவில்லை. சிலர் தொழில்களை இழந்துள்ளனர். இவ்வாறான பல பிரச்சினைகள் இருக்கின்றன.
தமிழ் அரசியலில் குறிப்பிடத்தக்க பகுதி இணையத்தளம் வழியாகவே முன்னெடுக்கப்படுகிறது. இது மிகவும் முக்கியமானது.
சிங்கள மற்றும் முஸ்லிம்களின் அரசியல் இன்னும் சம்பிரதாய முறையிலேயே இருந்து வருகிறது.எனினும் தமிழ் அரசியல் இணையத்தளம் வழியாக உலக முழுவதும் பரவி வருகிறது எனவும் பிரதமர் ரணில் விக்ரமசிங்க குறிப்பிட்டுள்ளார்.