கிருஷ்ணகிரி மாவட்டம் உத்தனப்பள்ளி அருகே உள்ள கொம்மேப்பள்ளி ஊராட்சி அனுமந்தபுரத்தைச் சேர்ந்தவர் கெம்பைய்யா (வயது 35) விவசாயி. இவரது மனைவி ராதா (25). இவர் கெலமங்கலம் அருகே உள்ள தொட்டபேளூரைச் சேர்ந்தவர் ஆவார். இவர்களுக்கு திருமணம் ஆகி 6 ஆண்டுகள் ஆகிறது.
இந்த தம்பதிக்கு மகேந்திரன் (4) என்ற மகனும், மதுஸ்ரீ என்ற 1½ வயது பெண் குழந்தையும் உள்ளனர். இந்த நிலையில் கணவன் – மனைவி இடையே அடிக்கடி குடும்ப தகராறு இருந்து வந்ததாக கூறப்படுகிறது. மேலும் ராதாவிற்கும், ஓசூர் பகுதியை சேர்ந்த சீனிவாசன் என்பவருக்கும் இடையே கள்ளத்தொடர்பு ஏற்பட்டது. இது பற்றி அறிந்த கெம்பைய்யா மனைவியை கண்டித்தார்.
இது தொடர்பாக அவர் ஊரில் முக்கிய பிரமுகர்களை வைத்து பல முறை பேச்சுவார்த்தை நடத்தியதாக கூறப்படுகிறது. ஆனாலும் ராதா கள்ளக்காதலை கைவிடவில்லை. இந்த நிலையில் குழந்தை மதுஸ்ரீ நேற்று இரவு வீட்டில் கழுத்து நெரித்து கொலை செய்யப்பட்ட நிலையில் பிணமாக கிடந்தாள்.
இதைப் பார்த்த அக்கம் பக்கத்தினர், இது குறித்து உத்தனப்பள்ளி போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். அதன் பேரில் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று குழந்தை மதுஸ்ரீயின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக ஓசூர் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.
போலீஸ் விசாரணையில் குழந்தை மதுஸ்ரீயை அவரது தாயே கள்ளக்காதல் விவகாரத்தில் கழுத்தை நெரித்து கொலை செய்தது தெரியவந்தது. இதையடுத்து போலீசார் ராதாவை கைது செய்தனர். போலீசில் அவர் பரபரப்பு வாக்குமூலம் கொடுத்துள்ளார். அதில் அவர் கூறியிருப்பதாவது:-
எனக்கும், ஓசூரை சேர்ந்த சீனிவாசன் என்பவருக்கும் இடையே கடந்த சில ஆண்டுகளாக கள்ளக்காதல் இருந்து வந்தது. நாங்கள் இருவரும் அடிக்கடி தனிமையில் சந்துத்து உல்லாசமாக இருந்து வந்தோம். இதனை எனது கணவர் கண்டித்தார். ஆனாலும் சீனிவாசன் உடனான கள்ளத்தொடர்பை என்னால் கைவிட முடியவில்லை. வாழ்ந்தால் அவருடன்தான் வாழ்வேன் என்பதில் பிடிவாதமாக இருந்தேன். நான் அவருடன் சென்றால் குழந்தை நிலைமை என்னாகும் என யோசித்தேன்.
குழந்தை இருந்ததால் அவளை வீட்டில் தனியாக விட்டுவிட்டு கள்ளக்காதலனை சந்திக்க முடியாமல் தவித்தேன். கள்ளக்காதலுக்கு மகள் தடையாக இருக்கிறாளே என நினைத்து மகள் என்றும் பாராமல் அவளை கழுத்தை நெரித்து கொன்றேன்.
இவ்வாறு அவர் வாக்கு மூலத்தில் கூறியுள்ளார். கைதான ராதா இன்று ஓசூர் கோர்ட்டில் ஆஜர்படுத்தப்பட்டு ஜெயிலில் அடைக்கப்பட உள்ளார்.