ஜெயலலிதாவின் அண்ணன் மகள் தீபா சில நாட்களுக்கு முன்னர், எம்.ஜி.ஆர் அம்மா தீபா பேரவையைத் தொடங்கினார்.
பின்னர், ஆர்.கே.நகர் இடைத் தேர்தலிலும் போட்டியிடப் போவதாக அறிவித்தார். இந்நிலையில், இரண்டு நாள்களுக்கு முன்னர் தீபாவின் கணவர் மாதவன், ஜெயலலிதாவின் சமாதியில் வந்து மரியாதை செலுத்திவிட்டு, சுமார் 1000 தொண்டர்களுடன் புதுக் கட்சித் தொடங்கப் போவதாக அறிவித்தார்
. தீபா, பேரவையைத் தொடங்கிய சில நாட்களிலேயே, அவரது கணவர் மாதவன் புதுக் கட்சி தொடங்கப் போவதாக அறிவித்தார்.
இதையடுத்து, இன்று தி.நகரில் செய்தியாளர்களைச் சந்தித்த தீபா, ‘அரசியலைவிட்டு நான் விலக வேண்டும் என்பதற்காக பல்வேறு வகைகளில் எனக்குத் தொல்லை தருகின்றனர்.
என் கணவர் புதுக் கட்சி தொடங்கப் போவதாக அறிவித்தது அதிர்ச்சி அளிக்கிறது. என் கணவரை பின்னால் இருந்து யாரோ இயக்குகின்றனர். ஆர்.கே.நகரில் போட்டியிடுவேன் என்ற அறிவித்ததால் பல்வேறு வதந்திகளை பரப்புகின்றனர்.
வதந்திகளுக்கு பின்னால் சசிகலாவின் குடும்பம் இருக்கிறது என்பதில் மாற்றுக் கருத்து இல்லை. எம்.ஜி.ஆர் அம்மா தீபா பேரவை தொடர்பாக வரும் வதந்திகளை யாரும் நம்ப வேண்டாம்.
பேரவையை கலைத்துவிட்டதாக வரும் வதந்திகளில் உண்மை இல்லை. பேரவையில் அ.தி.மு.க-வின் தொண்டர்கள் இணைந்துவிடுவார்கள் என்ற அச்சத்தில் செயல்படுகிறார்கள்.’ என்று கூறியுள்ளார்.