இரா.சம்பந்தன் எதிர்க்கட்சி தலைவராக செயற்படுகின்றாரா என்ற கேள்வி எழுகின்றதாகவும், அவர் அரசாங்கத்தின் எதிர்க்கட்சி தலைவராகவே செயற்படுகின்றார் என்றும் மக்கள் விடுதலை முன்னணியின் பாராளுமன்ற உறுப்பினர் சுனில் ஹந்துநெத்தி குற்றங்சாட்டியுள்ளார்.
மக்கள் விடுதலை முன்னணியின் பாராளுமன்ற உறுப்பினர் சுனில் ஹந்துநெத்தி முன்னணியின் அலுவலகத்தில் இன்று பத்திரிகையாளர்களைச் சந்தித்து கலந்துரையாடினார்.
அந்த சந்திப்பின் போது, தமிழ் தேசிய கூட்டமைப்பின் தலைவரும் எதிர்க்கட்சி தலைவருமான இரா.சம்பந்தன் குறித்து உங்களின் நிலைப்பாடு என்ன என கேள்வி எழுப்பியபோதே அவர் இவ்வாறு குற்றஞ்சாட்டினார்.
அவர் மேலும் தெரிவிக்கையில்,
சைட்டம் சம்பந்தமாக நாட்டில் உள்ள மாணவர்கள் வைத்தியர்கள் அனைவரும் ஒன்று திரண்டு போராடுகின்றார்கள். அதற்கு உங்களின் நிலைப்பாடு என்ன?
வறட்சி நிவாரணத்தினைக் கேட்டு விவசாயிகள் போராட்டத்தில் ஈடுபடுகின்றார்கள். பிணைமுறி மோசடியில் ஈடுபட்ட பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவின் சகாவிற்கு எதிராக நடவடிக்கை எடுப்பது தொடர்பில் உங்களின் நிலைப்பாடு என்ன?
வடக்கில் உள்ள மீனவர்களின் வாழ்வாதாரத்தினைச் சூரையாடும் இந்திய மீனவர்கள் குறித்து உங்களின் நிலைப்பாடு என்ன என்பது பற்றித் தேடிப்பார்க்கின்போது, பாராளுமன்றில் எதிர்க்கட்சியாக இருக்கின்ற இரா.சம்பந்தன் எமக்கும் எதிர்க்கட்சி தலைவர்.
ஆனால், எதிர்க்கட்சி தலைவராக பாத்திரம் வகிக்கின்றவர் தமது மாவட்டத்தில் மாத்திரம் உள்ள மக்களின் எதிர்க்கட்சி தலைவராக இருக்கின்றாரா என தேடிப்பார்த்தால் அதுவும் இல்லை.
இவர் எதிர்க்கட்சியாக இருப்பது, அரசாங்கத்திற்கு எதிர்க்கட்சியாக இருக்கின்றார்களே தவிர, மக்களுக்கு எதிர்க்கட்சியாக இல்லை என்றும் குற்றஞ்சாட்டினார்.
அதனால் மக்களின் எதிர்க்கட்சியாக நாட்டில் லஞ்ச ஊழல் மோசடி போன்ற மக்கள் முகம் கொடுக்கும் பிரச்சினைகளுக்கு முகம்கொடுக்கின்றதும், உண்மையான எதிர்க்கட்சியாக செயற்படுகின்றது மக்கள் விடுதலை முன்னணியே.
பாராளுமன்றத்தில் 6 பேர் அங்கம் வகிக்கின்றார்கள். மக்கள் முகம்கொடுக்கும் பிரச்சினைகளுக்கு நாட்டின்எதிர்க்கட்சியாக இருந்து எதிர்க்கட்சி பாத்திரத்தினை வகிப்பதற்கு பதிலாக தாம் வாழும் பிரதேசத்தில் வாழ்கின்ற மக்கள் எதிர்நோக்குகின்ற பிரச்சினைகளை பேசுகின்றார்களா என தேடிப்பார்த்தால் அதுவும் இல்லை.
வடக்கில் பொருத்து வீடுகள் குறித்து பல்வேறு மோசடிகள் ஏற்படுகின்றன. எமது பாராளுமன்ற உறுப்பினர் விமல் ரத்னாநாயக்க கதைக்கின்ற போது எதிர்கட்சி தலைவர் மௌனம் சாதிக்கின்றவராக இருக்கின்றார்.
எதிர்க்கட்சி தலைவராக இருந்து ஆக்கபூர்வமான நடவடிக்கைகள் எடுக்கப்படவில்லை.
மக்களின் எதிர்க்கட்சியாக செயற்படவில்லை அரசாங்கத்தின் எதிர்க்கட்சியாகவே செயற்படுகின்றார். மக்களின் எதிர்க்கட்சியாக செயற்படுவது மக்கள் விடுதலை முன்னணியே என்றும் அவர் சுட்டிக்காட்டினார்.