பாதிக்கப்பட்ட மக்களுக்கு நியாயமான பொறுப்புக்கூறல் இல்லாமல் நல்லிணக்கமும், மீள நிகழாமையும் சாத்தியமில்லையென ஐக்கிய நாடுகள் சபையின் முன்னாள் மனித உரிமை ஆணையாளர் நவநீதம்பிள்ளை தெரிவித்துள்ளார்.
தற்போது ஜெனீவாவில் ஐக்கிய நாடுகள் சபையின் 34ஆவது கூட்டத்தொடர் நடைபெற்றுக்கொண்டிருக்கும் நிலையில் சிறீலங்கா தொடர்பான நிலைப்பாடுகள் குறித்து கொழும்பிலிருந்து இயங்கும் ஊடகம் ஒன்றுக்கு கருத்துத் தெரிவிக்கையிலேயே மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்.
மேலும் அவர் தெரிவிக்கையில், சிறிலங்காவில் நல்லிணக்கத்தை ஏற்படுத்துவதற்கு பாதிக்கப்பட்ட மக்களுக்கான நியாயம் கிடைக்கும் வகையிலான பொறுப்புக்கூறல் செயற்பாடுகள் சரியான முறையில் மேற்கொள்ளப்பட வேண்டும்.
குறிப்பாக, காணாமல் ஆக்கப்பட்டோரின் ஆவணங்கள் சரியான முறையில் ஆவணப்படுத்தப்படுவதோடு, அவர்களின் உறவுகளுக்கு நியாயம் கிடைக்கும் வகையில் சரியான முறையிலும் வெளிப்படைத் தன்மையுடனும் விசாரணைகள் மேற்கொள்ளப்படவேண்டும்.
கடந்த காலங்களில், யூக்கோஸ்லாவியா மற்றும் ருவாண்டா போன்ற நாடுகளில் இவ்வாறான பிரச்சினைகள் கையாளப்பட்டமையை முன்னுதாரணமாகக் கொண்டு சிறீலங்கா பொறுப்புக்கூறல் விடயத்தில் நேர்மையாக செயற்படுவதன் மூலம் மட்டுமே நல்லிணக்கத்தை எதிர்பார்க்க முடியும் எனவும் அவர் வலியுறுத்தியுள்ளார்.