கனடாவின் ரொறன்ரோ மாநகரையும், யாழ்ப்பாண நகரத்தையும் இணைக்கும் இரட்டை நகர ஒப்பந்தம் இன்று சம்பிரதாயபூர்வமாக யாழ்ப்பாண பொது நூலகத்தில் கைச்சாத்திடப்பட்டுள்ளது.
இவ்வுடன்படிக்கையில், கனடா ரொறொன்ரோ நகர முதல்வர் ஜோன் ரொறி மற்றும் வடமாகாண முதலமைச்சர் சீ.வி.விக்னேஸ்வரன் மற்றும் யாழ்.மாநகர ஆணையாளர் பொ.வாகீசன் ஆகியோர் கைச்சாத்திட்டனர்.
யாழ்ப்பாணத்தின் கல்வி மற்றும் பொருளாதாரத்தை முன்னேற்றும் நோக்கத்திலேயே இவ்வுடன்படிக்கை கைச்சாத்திடப்பட்டுள்ளது.
இதன்போது உரையாற்றிய கனடா ரொறொன்ரோ நகர முதல் ஜோன் ரெறி, இலங்கைக்கு வெளியே தமிழர்கள் அதிகமாக செறிந்து வாழும் மாநகரமாக ரொறொன்ரோ நகரம் அமைந்துள்ளது.
அந்த வகையில், பொருளாதார விருத்திக்கு புலம் பெயர் தமிழர்களின் உதவி நிச்சயம் கிடைக்கும். அத்துடன் யாழ்ப்பாண மாவட்டத்தின் பொருளாதாரத்தினை மேம்படுத்த கனடா அரசாங்கம் உதவிகளையும் வழங்கும்.
இறுதியாக, வடக்கு மாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் யாழ்ப்பாண மாவட்டத்தினை பிரத்தியேகமாக வடிவமைத்து ரொறொன்ரோ நகர முதல் ஜோன் ரெறிக்கு நினைவுப் பரிசாக வழங்கினார்.
இந்நிகழ்வில் வடமாகாண சபையின் அவைத்தலைவர் சீ.வி.கே.சிவஞானம் மற்றும் வடமாகாண சுகாதார அமைச்சர் ப.சத்தியலிங்கம், வடமாகாண விவசாய அமைச்சர் பொ.ஐங்கரநேசன் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.