தமிழக முன்னாள் முதல்வர் ஜெயலலிதா உயிரிழந்ததையடுத்து சென்னை ஆர்.கே.நகர் தொகுதியில் ஏப்ரல் 12 ஆம் திகதி இடைத் தேர்தல் அறிவிக்கப்பட்டுள்ளது.
இதற்கிடையில், ஜெயலலிதா இல்லாததால், அதிமுக பொதுச் செயலாளராக அவரது தோழி சசிகலா நியமிக்கப்பட்டார்.
இந்நிலையில், அப்போது முதல்வராக இருந்த ஒ.பன்னீர்செல்வத்திற்கும், சசிகலாவிற்குமிடையே கருத்து வேறுபாடு காரணமாக கட்சியை விட்டு ஒ.பி.எஸ் நீக்கப்பட்டதையடுத்து, தனக்கென்று ஒரு கூட்டத்தினை உருவாக்கியுள்ளார் ஓ.பி.எஸ்.
இதையடுத்து, சொத்து குவிப்பு வழக்கில் தீர்ப்பு சசிகலாவிற்கு எதிராக வந்ததால் அவர் உட்பட 3 பேர் பெங்களூரு சிறையில் அடைக்கப்பட்டனர்.
அவர், சிரை சென்ற பின்பும், கட்சியில், பிரச்சனைகள் முடிந்தபாடில்லை. இரட்டை இலை சின்னம் தங்களுக்கு தான் சொந்தம் என அதிமுகவின் இரண்டு அணிகளான சசிகலா தரப்பும், ஓபிஎஸ் தரப்பும் உரிமை கொண்டாடி வருகின்றனர்.
இந்த விவகாரத்தில் இரு அணியினரையும் நேரில் ஆஜராகி விளக்கம் கேட்டுள்ளது தேர்தல் ஆணையம்.
ஆர்.கே.நகரில் வரும் 24ம் தேதி வேட்பாளர்களுக்கு சின்னங்களை ஒதுக்க உள்ளது தேர்தல் ஆணையம்.
இதனையொட்டி வரும் 22ம் தேதி இரட்டை இலை சின்ன விவகாரம் தொடர்பாக ஓபிஎஸ், சசிகலா அணிகள் தேதி நேரில் ஆஜராக வேண்டும் என தேர்தல் ஆணையம் உத்தரவிட்டுள்ளது.
இதில் சசிகலா நேரில் ஆஜராகி தங்கள் தரப்பு வாதத்தை முன் வைக்க வாய்ப்பு உள்ளதாக கூறப்படுகிறது.
இதனை காரணம் காட்டி சசிகலாவுக்கு சிறையில் பரோல் கேட்கவும் திட்டமிட்டுள்ளதாகவும் அவர் டெல்லி சென்று தேர்தல் ஆணையத்திடம் விளக்கம் அளிக்க உள்ளதாகவும் தகவல்கள் வருகின்றன.
பெங்களூரில் இருந்து டெல்லி செல்லும் சசிகலா டெல்லி பயணத்தை முடித்து விட்டு சென்னை திரும்ப வாய்ப்புள்ளதாகவும் அதிமுக வட்டாரத்தில் பேசப்படுகிறது.
தேர்தல் ஆணையத்தின் உத்தரவை காட்டி சசிகலாவுக்கு பரோல் கேட்கப்பட்டால் அவருக்கு அனுமதி கிடைக்கவும் வாய்ப்புள்ளதாக பேசப்படுகிறது.