முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வத்தின் சொத்து மதிப்பு மற்றும் அவரது குடும்பத்தினரின் சொத்து மதிப்புகள் குறித்து விசாரிக்க, விரைவில் விசாரணை ஆணைக்குழு அமைக்கப்படும் என்று அ.தி.மு.க.துணை பொதுச்செயலாளர் டி.டி.வி. தினகரன் தெரிவித்துள்ளார்.
முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவின் 69-வது பிறந்தநாள் தினத்தை முன்னிட்டு திருவண்ணாமலை அண்ணா சிலை அருகே அ.தி.மு.க. சார்பில் பொதுக்கூட்டம் மற்றும் நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா ஒன்று இடம்பெற்றது. இதில் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்ட அ.தி.மு.க. துணை பொதுச்செயலாளர் டி.டி.வி. தினகரன் இவ்விழாவில் உரையாற்றும் போதே இவ்வாறு தெரிவித்துள்ளார்.
அவர் மேலும் தெரிவிக்கையில், ‘ முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவிடம் நான் ஓ.பன்னீர்செல்வத்தை அறிமுகப்படுத்தியது மிகப்பெரிய தவறு. அவர் ஜெயலலிதாவின் மறைவிற்கு பின்னர் எதிரிகளோடு இணைந்து அ.தி.மு.க.வுக்கு துரோகம் இழைத்து விட்டார். அவர் பசுத்தோல் போர்த்திய புலியாக இருந்துள்ளார்.
ஓ.பன்னீர்செல்வம் முதலமைச்சராக இருந்த நாட்களில் ஜெயலலிதாவின் மரணம் குறித்து விசாரணை நடத்த வேண்டும் என்று எதுவும் கூறவில்லை. அவரிடம் இருந்து முதலமைச்சர் பதவி பறிக்கப்பட்ட சில நாட்களில் ஜெயலலிதா மரணம் குறித்து சி.பி.ஐ. விசாரணை நடத்த வேண்டும் என கோரிக்கை விடுத்து வருகிறார்.
7½ கோடி தமிழக மக்களை ஓ.பன்னீர்செல்வம் ஏமாற்ற பார்க்கிறார். எங்களுக்கு சி.பி.ஐ. விசாரணை நடத்துவது குறித்து கவலையில்லை. எங்கள் மடியில் கனமில்லை. அதனால் எங்களுக்கு பயமில்லை.
சி.பி.ஐ. விசாரணை நடத்தினால் முதலில் விசாரிக்கப்பட வேண்டியவர் ஓ.பன்னீர்செல்வம் தான். பெரியகுளத்தில் சாதாரண ஆளாக இருந்த ஓ.பன்னீர்செல்வம் தற்போது பிரதமரை சந்திக்க விமானத்தில் சென்று வருகிறார். அவரது மகன்கள், மருமகள்கள், உறவினர்கள் அடிக்கடி வெளிநாடு சென்று வருகிறார்கள். ஓ.பன்னீர்செல்வத்தின் சொத்துக்கள் தற்போது பலமடங்கு உயர்ந்துள்ளது.
ஓ.பன்னீர்செல்வத்தின் சொத்து மதிப்பு மற்றும் அவரது குடும்பத்தினரின் சொத்து மதிப்புகள் குறித்து விசாரிக்க விரைவில் விசாரணை ஆணைக்குழு அமைக்கப்படும்.
1½ கோடி தொண்டர்கள் உள்ள அ.தி.மு.க.வை யாராலும் அசைத்து பார்க்க முடியாது. ஆர்.கே.நகர் இடைத்தேர்தலில் நான் 50 ஆயிரம் வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெறுவேன். அத்தோடு எதிர்வருகின்ற 22ஆம் திகதிக்கு பின்னர் ஓ.பன்னீர்செல்வத்தின் அரசியல் வாழ்வு அஸ்தமனமாகி விடும்’ என்று அவர் குறிப்பிட்டுள்ளார்.