ஜெனீவாத் தீர்மானத்தில் இருந்து, வெளிநாட்டு நீதிபதிகள் தொடர்பான பரிந்துரையில் மாற்றம் செய்வதற்கு சிறிலங்கா அரசாங்கம் எடுத்த முயற்சியானது தோல்வியில் முடிவடைந்துள்ளதாக கொழும்பிலிருந்து வெளிவரும் ஆங்கில நாளிதழ் ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது.
2015ஆம் ஆண்டு சிறிலங்கா தொடர்பாக ஐநாவில் நிறைவேற்றப்பட்ட தீர்மானத்தில் வெளிநாட்டு மற்றும் கொமன்வெல்த் நீதிபதிகள், விசாரணையாளர்கள், வழக்குத்தொடுனர்களை உள்ளடக்கிய சிறப்பு நீதிமன்றம் உருவாக்கப்பட வேண்டும் என்று பரிந்துரைக்கப்பட்டிருந்தது.
இந்நிலையில் தற்போது நடைபெற்றுக்கொண்டிருக்கும் ஐநா கூட்டத்தொடரில் 2015ஆம் ஆண்டு நிறைவேற்றப்பட்ட தீர்மானத்தை முழுமையாக நிறைவேற்றுவதற்கு இரண்டு வருடங்கள் கால அவகாசம் வழங்கும் வகையில், தொடர்ச்சித் தீர்மான வரைபு முன்வைக்கப்பட்டுள்ளது.
இந்தத் தீர்மான வரைபில் வெளிநாட்டு நீதிபதிகள், விசாரணையாளர்கள், வழக்குத் தொடுநர்கள் தொடர்பான பரிந்துரைகளை நீக்குவதற்கு அல்லது திருத்தம் செய்வதற்கு சிறிலங்கா அரசாங்கம் கடுமையான முயற்சிகளை மேற்கொண்டது.
இது தொடர்பாக கொழும்பிலும், ஜெனீவாவிலும் பேச்சுக்கள் நடைபெற்றது. இருப்பினும் இந்தப் பேச்சுக்களில் எந்தப் பயனுமில்லையென அவ்வூடகம் செய்தி வெளியிட்டுள்ளது.