விஜய் சேதுபதி – டி.ராஜேந்தர் ஆகியோர் கூட்டணியில் உருவாகியுள்ள ‘கவண்’ படத்தை கே.வி.ஆனந்த் இயக்கியுள்ளார். இப்படத்தின் கதாநாயகியாக மடோனா செபஸ்டியான் நடித்துள்ளார். ஹிப் ஹாப் தமிழா ஆதி இசையமைத்துள்ளார். இப்படத்தை ஏ.ஜி.எஸ். நிறுவனம் பிரம்மாண்டமாக தயாரித்துள்ளது. கே.வி.ஆனந்த் இயக்கத்தில் இந்நிறுவனம் தயாரிக்கும் மூன்றாவது படம் இது என்பது குறிப்பிடத்தக்கது.
இந்நிலையில், இப்படத்தின் பத்திரிகையாளர் சந்திப்பு நேற்று சென்னையில் நடந்தது. இந்த சந்திப்பில் படக்குழுவினர் அனைவரும் கலந்துகொண்டனர். அப்போது டி.ராஜேந்தர் பேசும்போது,
கவண் படத்தில் நான் நடிக்க ஒப்புக்கொண்டதற்கு காரணம் கே.வி.ஆனந்த்தான். எனக்கு அவர் ரொம்பவும் பிடித்தமான கேமராமேன். முதல்வன் படத்தில் அவர் படமாக்கிய ஷக்கலாக்க பேபி ஒரு உதாரணம். அந்த பாடலில் நிறைய புதிய விஷயங்களை செய்திருப்பார். ஒளிப்பதிவில் தனக்கென தனி முத்திரை பதித்தவர்.
ஒரு இயக்குனர் ஒரு நிறுவனத்தில் படம் பண்ணினால் அதற்கு அடுத்தப் படத்தை அந்த நிறுவனத்துடன் இணைந்து பணியாற்றுவது கடினம். ஆனால், கே.வி.ஆனந்த் ஏஜிஎஸ் பிலிம்சில் மூன்று படம் பண்ணிவிட்டார். அந்தளவுக்கு தயாரிப்பாளர் மனதில் அவர் இடம்பிடித்துள்ளார். பெரிய நடிகர்களை வைத்து படம் எடுப்பதற்கு பல இயக்குனர்கள் இருக்கலாம். ஆனால், கதைதான் எனது ஹீரோ, ஹீரோவெல்லாம் அடுத்ததுதான் என்று கூறும் கே.வி.ஆனந்துக்கு தலைக்கணம் அல்ல. அவருடைய தன்னம்பிக்கை என்றுதான் கூறவேண்டும்.
கே.வி.ஆனந்த் என்னை தேடி வந்து கதை சொன்னார். முதலில் இதில் நடிப்பதற்கு நான் தயங்கினேன். அவர் கதை சொன்னவிதம் என்னை கவர்ந்தது. நான் வெளியில் யார் படத்திலும் நடிப்பது கிடையாது என்று அவரிடம் சொன்னேன். நீங்கதான் நடிக்கணும்னு பிடிவாதமாக இருந்தார். என்னுடைய கதாபாத்திரத்திற்கு வேறு யாரையாவது நடிக்க வைக்கலாமே என்றேன்.
ஆனால், அவரோ, உங்களோட மரியாதை கெட்டுடாம, உங்களுக்குன்னு ஒரு முழு சுதந்திரத்தை கொடுப்பேன். என்மேல நம்பிக்கை இருந்தா பண்ணுங்கன்னு சொன்னார். அப்படியொரு வார்த்தையை நான் இதுவரை எங்கேயும் கேட்டதில்லை. அவரது வார்த்தை எனக்கு ரொம்பவும் பிடிச்சது.
நான் பல படங்கள் தயாரிச்சிருக்கிறேன். ஆனா ஏவிஎம் அழைச்சும் அவங்களுக்கு நான் ஒரு படம் கூடிய பண்ணினது கிடையாது. வாஹினியில் செட் போட்டு படமாக்கியிருக்கிறேன். ஆனால், அந்த நிறுவனத்துக்கும் இதுவரை நான் படம் பண்ணினது கிடையாது. கோடியுள்ள மனிதனை மதிக்கறவன் இல்லை இந்த தாடி. நான் பல கோடி பார்த்துட்டேன், லட்சம் கோடி இருந்தாலும் நான் பேசுறதைதான் பேசுவேன். ஏன்னா, அதுதான் என் சுபாவம்.
இந்த கதையில் நான் நடிக்க முடியும்னு தன்னம்பிக்கையோடு நடித்தேன். ஒருபடத்தில் நடிச்சாலே தலையை தூக்கிவிட்டுட்டு போற காலத்துல, எத்தனை வெற்றி கொடுத்தாலும் பணிவுடன் இருக்கக்கூடிய நடிகர் விஜய் சேதுபதி. ஒருமுறை தொலைக்காட்சிக்கு பேட்டி கொடுத்துவிட்டு திரும்பி வரும்போது, ஒரு பையன் என்னிடம் ஆட்டோகிராப் கேட்டு ஓடி வருகிறான். அவர் யாருன்னு பார்த்தால் விஜய் சேதுபதி. அவருடன் நடிக்கும்போது எனக்கு ரொம்பவும் சவுகரியமாக இருந்தது.
இவ்வாறு அவர் பேசினார்.