பிரித்தானியாவில் கடந்த சனிக்கிழமை பல்வேறு அமைப்புகள் சார்பில் இனத்துவேசத்திற்கு எதிராகவும் அகதிகளின் உரிமைகளுக்காகவும் அணிவகுப்பு நடத்தப்பட்டது.
மார்ச் 18 ஆம் திகதி ஐக்கிய நாடுகள் சபையினால் பிரகடனப்படுத்தப்பட்ட சர்வதேச இனத்துவேசத்திற்கு எதிரான நாளாகும். குறித்த நாளில் லண்டன் மாநகரில் இனத்துவேசத்திற்கு எதிராகவும் அகதிகளின் உரிமைகளுக்காகவும் அணிவகுப்பு ஒன்று இடம்பெற்றது.
குறித்த அணிவகுப்பை பல அமைப்புக்கள், பல யூனியன்கள் இணைந்து ஏற்பாடு செய்திருந்தன. இவர்களுடன் இணைந்து அகதிகளுக்கான உரிமைகள் அமைப்பும் ஆர்ப்பாட்டத்தில் பங்குகொண்டது.
பிரித்தானியாவின் போராட்டங்களில் தமிழ் பேசும்மக்களும் இணைந்து கொண்ட தினமாக கடந்த சனிக்கிழமை அமைந்திருந்தது. ’நாங்கள் அகதிகள், அகதிகளின் உரிமைகளுக்காக போராடுகிறோம் என்பதை பல்லின மக்களுக்கும் தெரியப்படுதியதன் மூலம் அவர்களது முழு ஆதரவை திரட்டக்கூடியதாக இந்த அணிவகுப்பு இருந்தது.
- இந்த அணிவகுப்பானது 5 முக்கிய கோரிக்கைகளை முன்வைத்துள்ளது, அவை,
- அகதிகளை நாடுகடத்துவதை நிறுத்துக!
- அகதிகளுக்கு வேலைசெய்யும் உரிமையை வழங்குக.
- பிரித்தானியாவில் அனைவருக்கும் ஊதியமாக மணிக்கு £10 வழங்குக.
- அனைவருக்கும் இலவச மருத்துவ சேவையை வழங்குக, மருத்துவ சேவையை தனியார் மயப்படுத்தாதே! அகதிகள் மருத்துவ சேவைக்கு பணம்கோருவதை நிறுத்துக.
- பிரித்தானியாவில் உள்ள அனைத்து தடுப்புமுகாம்களையும் மூடுக. என்பவையாகும்.
அமெரிக்க ஜனாதிபதி அகதிகளுக்கு எதிரான துவேச பிரசாரம் செய்து வருவது உலகெங்கும் பல மக்களுக்கு அதிருப்தியை ஏற்படுதி உள்ளது. அதே போல் பிரித்தானிய அரசும் அகதிகளுக்கு எதிரான சட்ட திட்டங்களை அமுல்படுத்தி வருகிறது.
இந்த நிலையில் அகதிகளும் மனிதரே என அணைத்து அகதிகள் மற்றும் ஒடுக்கப்படும் மக்களின் போராட்டத்தோடு தமிழ்பேசும் மக்களும் இணைந்து கொண்டது முக்கிய நிகழ்வாகும்.