ஈராக்கில் சதாம் உசேன் கோலோச்சிக் கொண்டிருந்த காலம் அது. அப்போது, சதாம்தான் அமெரிக்காவுக்குச் சிம்ம சொப்பனம். சதாம் மீது விமர்சனங்களும் உண்டு; பலருக்கு நல்ல அபிமானமும் உண்டு. அப்படிப்பட்ட அபிமானிகளில் ஒருவர்தான், ஜாம்ஷெட்பூரைச் சேர்ந்த அந்த முதியவர்.
சதாம் உசேன் மீது கொண்ட பாசம் காரணமாகவே, பல எதிர்ப்புகளை மீறி தனது பேரனுக்கு சதாம் பெயரையே சூட்டி அழகு பார்த்தார். ”ஓடி வாங்க சதாம் குட்டி..” என்று சிறு வயதில் தனது பேரனைக் கொஞ்சி மகிழ்ந்து விளையாடிய அதே தாத்தா, இப்போது, ‘ஏண்டா அந்தப் பெயரை வைத்தோம்’ என்று நித்தம் நித்தம் கவலைப்படுகிறாராம்.
முதலில் ஜாம்ஷெட்பூர் சதாம் பற்றி ஒரு சின்ன ஃப்ளாஷ்பேக்.
சதாம் உசேன் சிறு வயதில் இருந்தே நல்ல படிப்பாளி. வகுப்பில் முதலிடம்தான். மேற்கல்விக்காக தமிழகத்துக்கு வந்தார். நுருல் இஸ்லாம் பல்கலையில் மரைன் இன்ஜீனியரிங் படித்தார். கடந்த 2014-ம் ஆண்டு, வகுப்பிலேயே இரண்டாவது மாணவராகத் தேர்ச்சி பெற்றிருந்தார். படிப்பை முடித்த பிறகு சதாம் உசேனின் வேலை தேடும் படலம் தொடங்கியது. பல கப்பல் நிறுவனங்களில் பணிக்கு விண்ணப்பித்தார்.
விரைவில் பணியில் சேர்ந்துவிடலாம் என்ற நம்பிக்கை அவருக்குள் இருந்தது. காலம்தான் போனதே தவிர,வேலை கிடைத்தபாடில்லை. என்னதான் காரணம் என்றும் அவருக்குப் புரியவில்லை. சதாமுடன் படித்த அனைவருக்கும் வேலை கிடைத்து பல்வேறு நாடுகளில் பணிபுரிந்துகொண்டிருந்தனர். வகுப்பிலேயே இரண்டாவது ரேங்க் பெற்ற சதாம், ஒவ்வொரு நிறுவனத்தின் வாசலையும் தட்டிக் கொண்டிருந்தார்.
என்னதான் காரணம் என்று யோசிக்க ஆரம்பித்தார். பணிக்கு விண்ணப்பித்த நிறுவனங்களின் ஹெச்.ஆர் துறையில் சிலரிடம் பேசியபோதுதான் அந்த அதிர்ச்சித் தகவல் கிடைத்தது.’ உங்கள் பெயர் சதாம் உசேன் என்று இருப்பதால் பணிக்கு எடுப்பதில் சிரமம் இருக்கிறது’ என்று பதில் கிடைத்தது. தனது பெயரை நினைத்து முதன்முறையாக நொந்துபோனார் அவர். இப்படி ஒன்றிரண்டு இடங்களில் விண்ணப்பம் நிராகரிக்கப்படவில்லை. கிட்டத்தட்ட 40 இடங்களில் அவரது விண்ணப்பம் நிராகரிக்கப்பட்டிருக்கிறது.
மரைன் இன்ஜீனியரிங் பணியில் பல நாடுகளுக்கும் செல்ல வேண்டியது இருக்கும். ஷாரூக்கான் போன்ற பிரபலங்களையே விமான நிலையங்களில் மடக்கும் நிலை இருக்கிறது. இத்தகைய சூழலில்தான் ‘சதாம் உசேன்’ என்ற பெயர் இருப்பதால், இவருக்குப் பணி வழங்க கப்பல் நிறுவனங்கள் யோசித்திருக்கின்றன. விஷயம் தெரிந்தவுடன் தனது பெயரை சாஜித் என்று மாற்றி சான்றிதழ் வழங்குமாறு பல்கலைக்கழகத்தை அணுகியிருக்கிறார். ஆனால், பள்ளிச் சான்றிதழ்களில் சதாம் உசேன் என்ற பெயரே இருப்பதால், பல்கலைக்கழக நிர்வாகம் மாற்றுப் பெயரில் சான்றிதழ் வழங்க மறுப்புத் தெரிவித்துவிட்டது.
சதாம் உசேன் CBSE பள்ளியில் படித்தவர். அதனால்,CBSE (Central Board of Secondary Education) நிர்வாகம்தான் பெயரை மாற்றி சான்றிதழ் அளிக்க வேண்டும். CBSE நிர்வாகம் சதாம் உசேனுக்கு இந்த விஷயத்தில் எந்த ஒத்துழைப்பும் அளிக்கவில்லை. தற்போது சாஜித் என்ற பெயரில் சான்றிதழ் அளிக்க உத்தரவிடுமாறு சதாம் உசேன் ஜார்கண்ட் மாநில உயர்நீதிமன்றத்தின் கதவைத் தட்டியிருக்கிறார். இவரது வழக்கு மே 5-ம் தேதி விசாரணைக்கு எடுக்கப்படுகிறது. இப்போது முழுமையாக நீதிமன்றத்தை மட்டுமே நம்பியிருக்கிறார் சதாம். நீதிமன்றம் உத்தரவிட்டால், சதாம் உசேன் சட்டப்படி, தனது பாஸ்போர்ட், வாக்காளர் அட்டை, டிரைவிங் லைசென்ஸ் உள்ளிட்டவற்றில் பெயரை மாற்றிக்கொள்ள முடியும்.
”எனது தாத்தவை எனக்கு ரொம்பப் பிடிக்கும். இப்படி ஒரு பெயரைச் சூட்டி, எனது வாழ்க்கையைப் பாழ்படுத்திவிட்டதாக அவர் மிகவும் வேதனைப்படுகிறார். என்னுடன் படித்தவர்கள் எல்லாம் நல்ல நிலையில் இருக்கின்றனர். எனக்கோ இரவில் உறக்கம் வரமாட்டேன் என்கிறது. பெயரையெல்லாம் காரணம் காட்டி என்னைப்போன்ற அப்பாவிகளை ஒதுக்குவதில் என்ன நியாயம் இருக்கிறது” என ஆதங்கப்படுகிறார் சதாம்.
சதாமின் கேள்வியில் நியாயம் இருப்பதாகவே தோன்றுகிறது!