ரஜினி தற்போது சங்கர் இயக்கத்தில் 2.ஓ படத்தில் பிசியாக நடித்து வருகிறார். இப்படத்தின் படப்பிடிப்பு விரைவில் முடிவடையவுள்ள நிலையில், அடுத்ததாக பா.ரஞ்சித் இயக்கும் புதிய படத்திலும் ரஜினி நடிக்க ஒப்பந்தமாகியுள்ளார். இப்படத்தை தனுஷ் தயாரிக்கவுள்ளார்.
இந்நிலையில், 2.ஓ படப்பிடிப்பு முடிந்ததும் இப்படத்துக்கான வேலைகளில் தீவிரமாக ரஜினி களமிறங்க உள்ளதாக கூறப்படுகிறது. அதற்கு முன்னதாக இப்படத்தில் நடிக்கும் பிற நடிகர், நடிகைகளை தேர்ந்தெடுத்துவிட பா.ரஞ்சித் உள்ளிட்ட படக்குழுவினர் தீவிரமாக களமிறங்கியுள்ளனர்.
இப்படத்தில் கதாநாயகியாக நடிக்க வித்யாபாலன், தீபிகா படுகோனே ஆகியோரிடம் பேச்சுவார்த்தை நடத்தி வருவதாக கூறப்படுகிறது. இந்நிலையில், இப்படத்தில் நடிகை குஷ்புவையும் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்க பேச்சுவார்த்தை நடத்தி வருவதாக இன்று செய்தி வெளியானது.
இதுகுறித்து குஷ்புவிடம் நேரடியாக தொடர்புகொண்டு கேட்டபோது, ரஜினியின் படத்தில் நான் நடிக்கப்போவதாக வெளிவந்த செய்தி, எனக்கும் செய்தியாகத்தான் தெரியும். மற்றபடி, அப்படத்தில் நடிப்பதற்காக யாரும் என்னை அணுகவில்லை. நான் இப்போதைக்கு எந்த படத்திலும் நடிப்பதில்லை என்று கூறியுள்ளார்.