உள்ளூராட்சி சபை தேர்தல் தொடர்பாக அமைச்சரவையில் அனுமதி கிடைக்குமாயின் எதிர்வரும் ஓகஸ்ட் மாதத்திற்குள் தேர்தலை நடத்த தயார் என தேர்தல்கள் ஆணைக்குழு அறிவித்துள்ளது.
தனியார் வானொலி நிகழ்ச்சியில் நேற்று (திங்கட்கிழமை) கலந்து கொண்ட தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர் மஹிந்த தேசப்பிரிய இந்த கருத்தை வெளியிட்டுள்ளார்.
உள்ளூராட்சி மன்ற தேர்தலை நடத்துவதற்கு தான் எந்த நேரத்திலும் தயாராக இருப்பதாகவும், சம்பந்தப்பட்ட அமைச்சே இதனை இழுத்தடித்து வருவதாகவும் இதன்போது அவர் குற்றம் சாட்டியுள்ளார்.
உள்ளுாராட்சி மன்றங்கள் பெரும்பாலானவற்றின் பதவிக்காலம் ஏற்கனவே நிறைவடைந்துள்ளதோடு வடமத்திய, சப்ரகமுவ மற்றும் கிழக்கு ஆகிய மாகாணசபைகளின் பதவிக் காலம் இந்த ஆண்டு செப்டெம்பர் மாதத்துடன் பூர்த்தியாவதாகவுள்ளமை குறிப்பிடத்தக்கது.