சிறிலங்காவின் முன்னாள் அமைச்சர் திஸ்ஸ அத்தநாயக்கவிற்கு எதிராக தாக்கல் செய்யப்பட்டுள்ள வழக்கொன்றில் சாட்சியமளிப்பதற்காக சிறிலங்கா ஆட்சியாளர் மைத்திரி மற்றும் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க ஆகியோரை நீதிமன்றத்தில் முன்னிலையாகுமாறு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
கடந்த தேர்தலின்போது ஐக்கிய தேசியக் கட்சியின் முன்னாள் பொது செயலாளராக கடமையாற்றிய திஸ்ஸ அத்தநாயக்க, அக்கட்சியிலிருந்து வெளியேறி மகிந்த ராஜபக்ஷவுக்கு ஆதரவாக தேர்தல் பிரச்சாரப் பணிகளில் ஈடுபட்டார்.
இதன்போது இடம்பெற்ற ஊடக சந்திப்பொன்றில், ஐக்கிய தேசியக் கட்சிக்கும், தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக்குமிடையில் இரகசிய ஒப்பந்தமொன்று செய்துகொள்ளப்பட்டதாக போலியான ஆவணமொன்றினை சமர்ப்பித்து இனவாதத்தைத் தூண்டினார் என குற்றம்சாட்டப்பட்டு சட்டமா அதிபரினால் வழக்கொன்று தாக்கல் செய்யப்பட்டது.
குறித்த வழக்கானது நேற்றையதினம் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டபோது, இந்த வழக்கில் அரசாங்கத் தரப்பில் முன்னிலையான சட்டத்தரணி, விசாரணையை முன்னெடுத்துச் செல்ல மைத்திரி, ரணிலின் சாட்சியங்கள் பதிவுசெய்யவேண்டுமெனக் கோரிக்கை விடுத்திருந்தார்.
இருப்பினும், உத்தியோகபூர்வ பணிகள் காரணமாக தம்மால் மன்றில் முன்னிலையாக முடியவில்லையென ஆட்சியாளர் மைத்திரிபால சிறிசேன மற்றும் ரணில் விக்கிரமசிங்கவினால் அறிவிக்கப்பட்டிருந்த நிலையில் எதிர்வரும் ஜூலை மாதம் 17ஆம் நாள் அவர்கள் நீதிமன்றத்தில் முன்னிலையாகவேண்டுமென நீதிபதி உத்தரவிட்டுள்ளார்.