தமிழ் திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்க தேர்தல் அடுத்த மாதம் சென்னையில் நடக்கிறது. இதில் நடிகர் விஷால் தலைமையில் ஒரு அணியினர் போட்டியிடுகின்றனர். அந்த அணியை சேர்ந்த நடிகர் பிரகாஷ்ராஜ், இயக்குனர் பாண்டிராஜ், தயாரிப்பாளர் ஞானவேல்ராஜா உள்ளிட்ட பலர், நேற்று மதுரையில் உள்ள திரைப்பட தயாரிப்பாளர்களை சந்தித்து தங்கள் அணிக்கு ஆதரவு தருமாறு கேட்டுக்கொண்டனர். தொடர்ந்து நடைபெற்ற பத்திரிகையாளர்கள் சந்திப்பு நிகழ்ச்சியில் விஷால் கூறியதாவது-
எங்களுக்கு ஆதரவு அளிக்கும்படி மதுரையில் உள்ள தயாரிப்பாளர் சங்க நிர்வாகிகளை கேட்டுள்ளோம். அவர்களும் எங்களுக்கு வாக்களிப்பதாக கூறியுள்ளனர். நாங்கள் 12 அம்ச கோரிக்கைகளை நிறைவேற்றுவதாக அறிவித்திருக்கிறோம். தேர்தலில் வெற்றி பெற்ற பின்னர் அந்த வாக்குறுதிகளை நிறைவேற்றாவிட்டால் பதவியை ராஜினாமா செய்துவிடுவோம்.
தயாரிப்பாளர் சங்கத்தில் இருப்பவர்கள், சிறிய அளவில் பணம் போட்டு படம் தயாரிப்பவர்களின் நலனுக்காக எந்த வித நடவடிக்கையும் எடுக்கவில்லை. மேலும் அதில் உள்ள நிர்வாகிகள் யாரையும் தொடர்பு கொள்ளமுடிவதில்லை. அவர்களின் முகவரிகள் பொய்யானதாக இருக்கிறது.
பொது நலம் இல்லாமல் சுயநலத்தோடு செயல்பட்டுக் கொண்டிருக்கிறார்கள். பல்வேறு வழிகளில் சங்கத்திற்கு வருவாய் இழப்பினை ஏற்படுத்தி இருக்கிறார்கள். பொய் கணக்கு எழுதுகிறார்கள். இதற்கு அவர்கள் பதில் அளிக்க வேண்டும்.
கேபிள்கள் மற்றும் சமூக வலைதளங்களில் புதுப்படங்கள் வெளியிடப்படுகின்றன. இதுசம்பந்தமாக தயாரிப்பாளர் சங்க உறுப்பினர்கள் இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்காமல் இருக்கின்றனர். ஒரு வருடமாக தயாரிப்பாளர் சங்கத்தில் பல்வேறு குளறுபடிகள் ஏற்பட்டுள்ளன.
இந்த தேர்தலில் நாங்கள் வெற்றி பெற்று சிறு தயாரிப்பாளர்களின் நலனுக்காக போராடுவோம். ஒரு படத்தை தயாரித்தவர்கள் மறுபடியும் படம் தயாரிக்க தயக்கம் காட்டுகின்றனர். இனிவரும் காலங்களில் அதுபோல் நடக்காமல் தயாரிப்பாளர்களின் அனைத்து பிரச்சினைகளுக்கும் தீர்வு காணப்படும். அதுபோல், சமீப காலமாக சிறு முதலீடு கொண்ட படங்கள் வெளியிடுவதில் பிரச்சினைகள் ஏற்பட்டுள்ளன. படம் வெளியிடப்படுவதில் ஏதேனும் பிரச்சினை ஏற்பட்டால், அதற்கான வழிகாட்டுதல்களையும், தீர்வுகளையும் தயாரிப்பாளர்களுக்கு எடுத்துரைப்போம்.
நடிகர் சங்க தேர்தலின் போது அறிவித்த வாக்குறுதிகளை 90 சதவீதம் நிறைவேற்றி விட்டோம். நடிகர் சங்க கட்டிடம் கட்டுவதற்கான பணிகள் ஒருவாரத்தில் தொடங்கும். வெளிப்படையான நிர்வாகத்தை செயல்படுத்திக் கொண்டிருக்கிறோம். இனியும் அப்படியே செயல்படுவோம். சினிமாவிற்கு துரோகம் செய்பவர்கள் யாராக இருந்தாலும் அவர்களை விடமாட்டேன்.
இவ்வாறு அவர் கூறினார்.
நடிகர் பிரகாஷ்ராஜ் கூறுகையில், “கடந்த சில வருடங்களான தரமான படங்களை வெளியிட முடிவதில்லை. இதனால் சிறிய அளவில் பணம் போட்டு படம் எடுக்கும் தயாரிப்பாளர்களின் நிலைமை பரிதாபத்திற்குரியதாக இருக்கிறது. தேர்தலில் வெற்றி பெறுவதற்கு வசதியாக புதிய அலை உருவாகி உள்ளது. இந்த அலை வெற்றி அலையாக இருக்கும் என்பதில் எந்த வித மாற்றமும் இல்லை. தமிழ் சினிமா அழகானதாக மாறப்போகிறது. தேர்தலில் வெற்றி பெற்று சுயநலத்தோடு செயல்படாமல் பொது நலத்தோடு செயல்படுவோம். நலிந்த, சிறு தயாரிப்பாளர்களுக்கு முக்கியத்துவம் அளிப்போம். தயாரிப்பாளர்களை தலைநிமிர்ந்து நடக்க வைப்போம்“ என்றார்