சுவிட்சர்லாந்து நாட்டின் ஜெனீவா நகரில் நடைபெற்ற ஐ.நா. மனித உரிமை மாநாட்டில் தமிழ் திரைப்பட இயக்குனர் வ.கவுதமன் கலந்துகொண்டு உரையாற்றினார். அவர் பேசியதாவது:-
1½ லட்சம் ஈழத்தமிழர்கள் இலங்கையில் சிங்கள ராணுவத்தினரால் சுட்டும், விமான குண்டுகள் வீசியும், எறிகணைக் குண்டுகள் வீசியும் இனப்படுகொலை செய்யப்பட்டுள்ளனர். ஐ.நா உள்ளக விசாரணை அறிக்கையின்படி 70 ஆயிரத்துக்கும் மேற்பட்ட ஆண், பெண், குழந்தைகள், கர்ப்பிணி தாய்மார்கள், முதியோர்கள் என தமிழ் மக்கள் சிங்கள ராணுவத்தினரால் படுகொலை செய்யப்பட்டுள்ளது நிரூபணம் ஆகி உள்ளது.
போர்க்குற்ற விசாரணையை சர்வதேச நீதிபதிகள் மூலம் இதுவரை இலங்கை அரசு நடத்தாத நிலையில் இலங்கை அரசுக்கு மேலும் கால நீட்டிப்பு வழங்கக்கூடாது என்று ஐ.நா. மனித உரிமைகள் ஆணையம் கடந்த 2015-ம் ஆண்டு தீர்மானம் நிறைவேற்றி, அதனை ஐ.நா. பொதுச்சபையிடம் ஒப்படைத்தது.
இந்த நிலையில் தற்போது அமெரிக்காவும், இங்கிலாந்தும் தமக்கு சாதகமான இன்றைய இலங்கை அரசை பாதுகாப்பதற்காக விசாரணை கால நீட்டிப்புக்கு ஆதரவு அளித்து, காலப்போக்கில் விசாரணையை இல்லாமல் செய்யும் இலங்கை அரசின் தந்திரத்துக்கு உதவுவது மிகப்பெரிய குற்றம் ஆகும்.
இலங்கை அரசு கோரும் மேலும் 2 ஆண்டுகால கால நீட்டிப்புக்கு வாய்ப்பு அளிக்காமல் உடனடியாக ஐ.நா. பொதுச்சபை மூலம் ஐ.நா. பாதுகாப்பு சபை வாயிலாக ஒரு சர்வதேச விசாரணையை நடத்தி தமிழ் மக்களுக்கு நீதி வழங்க வேண்டும்.
இந்த பூமி பந்தின் ஆதி இனமான, 50 ஆயிரம் ஆண்டுகள் வரலாறு கொண்ட 10 கோடி தமிழர்களின் சார்பாக மன்றாடி கேட்கிறேன்.
இவ்வாறு அவர் பேசினார்.