தமிழ் மக்களின் ஜனநாய தீர்ப்புகளுக்கு கடந்த காலங்களில் அங்கீகாரம் வழங்கப்படவில்லையென தெரிவித்துள்ள தமிழ் தேசியக் கூட்டமைப்பின் தலைவரும் எதிர்க்கட்சித் தலைவருமான இரா.சம்பந்தன், நியாயமான கருத்தொருமைப்பாட்டின் அடைப்படையில் ஓர் அரசியலமைப்பை வகுப்பற்கு தற்போது கிடைத்துள்ள வாய்ப்பை நேர்மையான அர்ப்பணிப்புடன் பற்றிக்கொள்ள வேண்டுமென தெரிவித்துள்ளார்.
புதுடெல்லியில் அண்மையில் நடைபெற்ற பயங்கரவாததத்திற்கு எதிரான மாநாட்டில் கலந்துகொண்டு உரையாற்றிய எதிர்க்கட்சித் தலைவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார். தனதுரையில் அவர் மேலும் தெரிவிக்கையில்-
”நாடு சுதந்திரம் பெற்று மூன்று தசாப்தங்களின் பின்னர், ஜனநாயக வழியிலானதும் அரசியல் ரீதியிலானதுமான நடைமுறைகள் அனைத்தும் தோல்வியுற்றதன் பின்னர் தான் ஆயுதப் போராட்டம் தொடங்கியது. வாக்குச்சீட்டு வழியிலான நடைமுறையின் தோல்வியினால் ஏற்படுத்தப்பட்ட வெற்றிடத்தை, வேட்டு (துப்பாக்கிரவை) மூலம் நிரப்ப மேற்கொள்ளப்பட்ட முயற்சிக்கான ஒரு சிறந்த உதாரணம் இதுவாகும். வாக்கின் தீர்ப்புகளை மதித்து அங்கீகரிக்க வேண்டியதன் முக்கியத்துவத்தையே அது வலியுறுத்துகிறது. அத்தகைய மதிப்பளித்தலும் அங்கீகரித்தலும்தான் வேட்டிற்கான தேவையை அகற்றுவதற்கான மிகவும் நம்பிக்கையான வழியாகும்.
இவை அனைத்தினதும் பெறுபேறு, இலங்கைத் தமிழ் மக்கள் தொகையில் ஐம்பது வீதம் வரையிலானவர்கள் நாட்டை விட்டகன்று உலகெங்கிலும் பலநாடுகளில் வாழ்கின்றனர். 150,000இற்கும் மேற்பட்ட தமிழர்கள் கொல்லப்பட்டுள்ளனர். ஆயுதப் போராட்டத்தின் போது சிங்களவர்கள், தமிழர்கள் மற்றும் முஸ்லிம்கள் என்று அனைத்து மக்களும் பெருமளவில் துன்பத்தை அனுபவித்துள்ளனர். இனிமேலும் வன்முறைகள் ஏற்பட்டால் அது இன்னும் அதிகமான தமிழர்கள் நாட்டை விட்டுத் தப்பியோட வழிவகுக்கும்.
இந்த முரண்பாடு சர்வதேசக் கவனத்தைப் பெற்றுள்ளதோடு, 2012, 2013, 2014 மற்றும் 2015ஆம் ஆண்டுகளில் ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையினால் நான்கு தீர்மானங்களும் நிறைவேற்றப்பட்டுள்ளன.
இலங்கை அரசாங்கம் மற்றும் ஆயுதப் புரட்சி இயக்கம் ஆகிய இரு தரப்பினராலும் இழைக்கப்பட்ட சர்வதேச மனித உரிமைகள் சட்டங்கள் மற்றும் சர்வதேச மனிதாபிமானச் சட்டங்கள் ஆகியவற்றின் மீறல்களை இந்தத் தீர்மானங்கள் கையாளுகின்றன. 2015ஆம் ஆண்டு ஒக்டோபர் மாதம் நிறைவேற்றப்பட்ட தீர்மானத்தின் அமுலாக்கம் தற்போது ஜெனீவாவில் ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையினால் மீளாய்வு செய்யப்படுகிறது. அது நிலைமாற்று நீதி நடைமுறைகள், காணிகள் விடுவிப்பு, காணாமல் ஆக்கப்பட்டோர், தடுத்து வைக்கப்பட்டிருப்போர் மற்றும் இந்த முரண்பாட்டிற்கு நியாயமாதும் ஏற்றுக்கொள்ளத்தக்கதுமான ஓர் அரசியல் தீர்வைக் கொண்டுவரக் கூடிய அரசியலமைப்பு ஏற்பாடுகளை வகுத்தல் ஆகியன தொடர்பான விடயங்கள் ஆகியவற்றை ஆராய்கின்றது.
புதிய அரசாங்கம் கருத்தொருமைப்பாட்டின் அடிப்படையில் நாட்டிற்கு ஒரு புதிய அரசியலமைப்பை வகுப்பதற்கு உறுதி பூண்டு, அந்த நடைமுறையையும் ஆரம்பித்துள்ளது. சுதந்திரத்திற்குப் பிந்திய இலங்கையில் முதல் தடவையாக நாட்டிலுள்ள அனைத்துக் கட்சிகளின் மற்றும் அனைத்து மக்களின் மத்தியிலும் நிலவும் பெருமளவு நியாயமான கருத்தொருமைப்பாட்டின் அடைப்படையில் ஓர் அரசியலமைப்பை வகுப்பதற்கு ஒரு வாய்ப்புக் கிட்டியுள்ள நிலையில், அதனை சரியான முறையில் பயன்படுத்திக்கொள்வது அவசியமாகும்” என்றார்.