நடிகர் கமலஹாசன் கடந்த சில நாட்களுக்கு முன்பு தனியார் தொலைக்காட்சிக்கு பேட்டி அளித்திருந்தார். அப்போது அவர், இந்துக்களின் புனித நூலான மகாபாரதத்தையும், இந்துக்களின் கலாச்சாரத்தையும் கொச்சைப்படுத்தி பேசியதாக இந்து அமைப்புகள் குற்றம் சாட்டியது.
இதையடுத்து நடிகர் கமலஹாசனுக்கு எதிராக தமிழத்தில் பல்வேறு இடங்களில் முழுவதும் இந்து அமைப்புகள் போராட்டங்கள் நடத்தியது. இந்நிலையில் நடிகர் கமல்ஹாசன் மீது வழக்குப் பதிய வேண்டும் என வள்ளியூர் கோர்ட்டில் ஒருவர் இன்று மனு தாக்கல் செய்தார்.
நெல்லை மாவட்டம் வள்ளியூர் அடுத்த பழவூரை சேர்ந்தவர் ஆதிநாத சுந்தரம். இவர் குமரி மாவட்டம் அஞ்சுகிராமத்தில் கம்ப்யூட்டர் மற்றும் உதிரி பாகங்கள் விற்பனை கடை வைத்து வியாபாரம் செய்து வருகிறார். அஞ்சுகிராமம் வியாபாரிகள் சங்க தலைவராகவும், பழவூர் நாறும்பூ நாதசுவாமி கோவில் பக்தர்கள் நல சங்க செயலாளராகவும் உள்ளார்.
வள்ளியூர் குற்றவியல் நடுவர் நீதிமன்றத்தில் ஆதிநாத சுந்தரம் தாக்கல் செய்த மனுவில் கூறியிருப்பதாவது:-
கடந்த 12-ந்தேதி தனியார் தொலைக்காட்சிக்கு நடிகர் கமலஹாசன் பேட்டியளித்தார். அப்போது அவர் இந்து மதத்தை அவமதிக்கும் வகையில் மகாபாரதத்தை இழிவுப்படுத்தி அவதூறாக பேசியுள்ளார். எனவே நடிகர் கமலஹாசன் மீது வழக்குப்பதிந்து நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இவ்வாறு அந்த மனுவில் கூறப்பட்டிருந்தது.