தமிழ் தேசியக் கூட்டமைப்பின் தலைவரான இரா.சம்பந்தன் இன்று எதிர்க்கட்சி தலைவராக செயற்படுகின்றார் என்றால் அதற்கு விடுதலைப் போராட்டமே காரணமென தெரிவித்துள்ள விடுதலைப் புலிகளின் நிர்வாகத்துறை துணை பொறுப்பாளராக செயற்பட்ட இளஞ்சேரனின் மனைவி, ஆனால் அதனை மறந்து சம்பந்தன் செயற்படுகின்றார் என குற்றஞ்சாட்டியுள்ளார்.
கிளிநொச்சி கந்தசுவாமி கோயில் முன்றலில் ஆரம்பிக்கப்பட்ட காணாமல் போனோரின் உறவினர்களது போராட்டம், இன்று (திங்கட்கிழமை) 29வது நாளாக தொடர்ந்தும் முன்னெடுக்கப்பட்டு வருகின்றது. இப்போராட்டத்தில் கலந்துகொண்டு கருத்துத் தெரிவிக்கும்போதே இளஞ்சேரனின் மனைவி இக் குற்றச்சாட்டை முன்வைத்தார்.
அரசாங்கத்தின் உயர் பாதுகாப்பில் இருந்துகொண்டு அரசுக்கு சார்பாகவே எதிர்க்கட்சித் தலைவர் செயற்படுகின்றார் எனக் குறிப்பிட்ட அவர், கடந்த ஒரு மாத காலமாக கண்ணீருடன் போராடும் தம்மை பற்றி சிந்திக்கவில்லையென குறிப்பிட்டுள்ளார்.
இன்று சர்வதேசமும் அரசின் கதைக்கு செவிசாய்த்து இரண்டு வருட கால அவகாசம் வழங்குவதாக தெரிவித்துள்ள இளஞ்சேரனின் மனைவி, தம்மால் ஏற்படுத்தப்பட்ட நல்லாட்சி அரசு மக்களுக்கு விரோதமாகவே செயற்படுகின்றதென குற்றஞ்சாட்டியுள்ளார்.
இந்நிலையில், ராணுவத்திடம் கையளிக்கப்பட்ட தனது கணவனுக்கு என்ன நடந்ததென்ற உண்மையை அரசாங்கம் வெளிப்படுத்தும் வரை போராட்டத்தை கைவிடப் போவதில்லையென அவர் மேலும் தெரிவித்துள்ளார்.
அதுமட்டுமன்றி தங்கன், இளம்பருதி, மலரவன், கரிகாலன் உள்ளிட்ட பல முக்கிய உறுப்பினர்கள் கத்தோலிக்க அருட்தந்தை ஒருவருடன் இராணுவத்தினரிடம் குடும்பம் குடும்பமாக சரணடைந்ததாகவும் அவர்கள் பின்னர் அரச பேரூந்தில் அழைத்துச் செல்லப்பட்டதை தான் கண்டதாகவும் தெரிவித்த இளஞ்சேரனின் மனைவி, இவர்கள் அனைவருக்கும் என்ன நடந்ததென அரசாங்கம் பதில் கூற வேண்டுமென வலியுறுத்தியுள்ளார்.