பட்டினியால் சுமார் 26 பேர் உயிரிழந்த கொடுமை சோமாலியாவின் தெற்கு பிராந்தியமான ஜுபாலண்டில் இடம்பெற்றுள்ளதாக அரச ஊடகமொன்று செய்தி வெளியிட்டுள்ளது.
கடந்த 36 மணித்தியாலங்களுக்குள்ளேயே இந்த உயிரிழப்புகள் சம்பவித்திருப்பதாக பிராந்திய உள்துறை அமைச்சர் மற்றும் வறட்சி குழுத் தலைவர் அப்திரஹ்மான் மொஹமட் ஹுசைன் ஆகியோர் தெரிவித்துள்ளனர். இந்நிலையில், பட்டினிச் சாவை தடுத்து நிறுத்த அவசர உதவிகளை நாடி நிற்பதாகவும் அவர்கள் குறிப்பிட்டுள்ளனர்.
அதன்படி பேரழிவை எதிர்நோக்கிவரும் ஜுபாலண்ட் பிராந்தியத்திலிருந்து நூற்றுக் கணக்கான குடும்பங்கள் அங்கிருந்து வெளியேறி, தலைநகர் மொகடிஷீவில் அகதிகளாக தஞ்சம் புகுந்துள்ளனர்.
இதேவேளை, சோமாலியாவில் சுமார் 6 மில்லியன் மக்கள் நிவாரண உதவிகளின் தேவையை எதிர்கொண்டிருப்பதாக சோமாலியாவிற்கு விஜயம் மேற்கொண்டுள்ள ஐ.நா. பொதுச்செயலாளர் அந்தோனியோ குற்ரஸ் தெரிவித்துள்ளார்.
வறட்சியின் கொடூர பிடியில் சிக்குண்டுள்ள சோமாலியாவில் ஆறுகள், கிணறுகள் போன்ற நீர்நிலைகள் வற்றி பாரிய நீர்த்தட்டுப்பாடு ஏற்பட்டுள்ள நிலையில் கால்நடைகள் உயிரிழந்துள்ளதுடன், பயிர்களும் கருகி போயுள்ளமை குறிப்பிடத்தக்கது.