இலங்கை தொடர்பில் ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையின் ஆணையாளர் செயிட் அல் ஹூசைன் அண்மையில் வெளியிட்ட அறிக்கை தொடர்பான விவாதம் இன்று (புதன்கிழமை) இடம்பெறவுள்ளது.
ஜெனீவா நேரப்படி நண்பகல் 12 மணிமுதல் பிற்பகல் 3 மணிவரை இடம்பெறவுள்ள இவ் விவாதத்தில் முதலில் ஐ.நா ஆணையாளர் உரை நிகழ்த்தவுள்ளதோடு, தொடர்ந்து உறுப்பு நாடுகளும் இலங்கை தொடர்பான தமது நிலைப்பாட்டை வெளியிடவுள்ளன.
உறுப்பு நாடுகளின் கேள்விகளுக்கு இலங்கை சார்பில் வெளிவிவகார பிரதியமைச்சர் கலாநிதி ஹர்ஷ டி சில்வா பதிலளிப்பார்.
அண்மையில் இலங்கை தொடர்பான அறிக்கையை வெளியிட்டு உரையாற்றிய ஐ.நா. ஆணையாளர், இலங்கையின் நல்லிணக்க செயற்பாடுகள் போதுமானதாக இல்லையென்பதோடு, விசாரணை பொறிமுறையானது நம்பகத்தன்மை வாய்ந்ததும் பாதிக்கப்பட்டவர்களுக்கு நீதியை பெற்றுக்கொடுக்கும் வகையிலும் அமையவேண்டும் எனத் தெரிவித்திருந்தார். அந்தவகையில் இன்றைய தினம் சர்வதேச நீதிபதிகள் மற்றும் விசாரணையாளர்கள் உள்ளடக்கப்பட்ட கலப்பு விசேட நீதிமன்றத்தை இலங்கையில் ஏற்படுத்துமாறு வலியுறுத்துவார் என எதிர்பார்க்கப்படுகிறது.
இன்றைய விவாதத்தில் அமெரிக்கா, பிரிட்டன் உள்ளிட்ட நாடுகள் பங்கேற்று உரையாற்றுமெனவும் எதிர்பார்க்கப்படுகிறது.
இதேவேளை, இலங்கை தொடர்பில் இம்முறை புதிய பிரேரணையொன்று ஐ.நா. பேரவையில் சமர்ப்பிக்கப்பட்டுள்ளதோடு, அது தொடர்பான விவாதம் நாளைய தினம் நடைபெறவுள்ளமை குறிப்பிடத்தக்கது.