பாகிஸ்தான் வாழ் பாகிஸ்தானியர் அய்மான் பரீஸ் (47). இவர் கடந்த 1999-ம் ஆண்டு அமெரிக்க குடியுரிமை பெற்று சிகாகோவில் வசித்து வந்தார். இந்நிலையில், அல்கொய்தா தீவிரவாதிகளுடனும், காஷ்மீர் தீவிரவாதிகளுடன் தொடர்பு இருப்பதாக கைது செய்யப்பட்ட அவருக்கு, 20 ஆண்டு ஜெயில் தண்டனை விதிக்கப்பட்டது. 2003-ம் ஆண்டு முதல் அவர் சிறைத்தண்டனை அனுபவித்து வருகிறார்.
இந்நிலையில், அவரது அமெரிக்க குடியுரிமையை ரத்து செய்ய சிகாகோ கோர்ட்டில் வழக்கு தொடரப்பட்டுள்ளது. அமெரிக்க நீதித்துறை சார்பில் தொடரப்பட்ட இவ்வழக்கு விசாரணை நடைபெற்று வருகிறது.
வழக்கு விசாரணை முடிவில், அய்மான் பாரிசின் அமெரிக்க குடியுரிமை ரத்து செய்யப்பட்டால், அவரது தண்டனைக் காலம் முடிந்ததும் அவரை நாடு கடத்த வேண்டும்.
மோசடி இல்லாமல் சட்டப்பூர்வமான குடியுரிமையை உறுதி செய்வதற்கு இந்த வழக்கு முக்கியமானது என்று அரசு தலைமை வழக்கறிஞர் கூறியுள்ளார்.
நீதிமன்ற ஆவணங்களின்படி, அய்மான் பாரிஸ், 1969-ம் ஆண்டு பாகிஸ்தானின் கராச்சியில் பிறந்தவர். 1994ம் ஆண்டு மார்ச் மாதம் மற்றொருவரின் பாஸ்போர்ட் மற்றும் விசா மூலம் அமெரிக்காவுக்கு வந்துள்ளார். பின்னர், 4 மாதம் கழித்து அடைக்கலம் கேட்டு விண்ணப்பித்து, அதிலும் பொய்யான தகவலை தெரிவித்திருப்பதாக அரசு வழக்கறிஞர்கள் தெரிவித்தனர்.