ஆர்.கே.நகர் தொகுதி இடைத்தேர்தலில் அ.தி.மு.க.வின் இரு அணிகளில் யாரும் இரட்டை இலை சின்னம் மற்றும் அ.தி.மு.க என்ற கட்சிப்பெயரையும் பயன்படுத்த தேர்தல் ஆணையம் தற்காலிக தடை விதித்துள்ளது.
முதல்-அமைச்சராகவும், அ.தி.மு.க. பொதுச் செயலாளராகவும் இருந்த ஜெயலலிதாவின் மறைவுக்கு பின் சசிகலா தலைமையில் ஓர் அணியாகவும், முன்னாள் முதல்-அமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் தலைமையில் ஓர் அணியாகவும் அ.தி.மு.க. செயல் பட்டு வருகிறது.
இந்த நிலையில் ஏப்ரல் 12-ந் தேதி நடைபெற இருக்கும் ஆர்.கே.நகர் தொகுதி இடைத்தேர்தலில் அ.தி.மு.க.வின் இரட்டை இலை சின்னத்தை தங்களுக்கே ஒதுக்கவேண்டும் என்று இரண்டு அணியினரும் டெல்லி சென்று தலைமை தேர்தல் கமிஷனரிடம் மனு அளித்தனர்.
இரட்டை இலை சின்னம் யாருக்கு? என்பது குறித்து இறுதி முடிவு எடுப்பதற்காக தேர்தல் கமிஷன் ஓ.பன்னீர்செல்வம் தரப்பினரையும், சசிகலா தரப்பினரையும் நேற்று நேரில் அழைத்து விசாரணை நடத்தியது. தலைமை தேர்தல் கமிஷனர் நசீம் ஜைதி மற்றும் தேர்தல் கமிஷனர்கள் ஏ.கே.ஜோதி, ஓ.பி.ராவத் ஆகியோர் விசாரணை நடத்தினார்கள்.
நேற்று காலை 10.30 மணிக்கு தொடங்கிய விசாரணை மாலை 5.30 மணிக்கு முடிவடைந்தது.
இரு தரப்பு வாதங்களையும் கேட்ட தேர்தல் கமிஷன், அவர்கள் தெரிவித்த கருத்துகள் பற்றி நீண்ட நேரம் ஆலோசித்தது.
பின்னர், ஆர்.கே.நகர் தொகுதி இடைத்தேர்தலில் இரட்டை இலை சின்னத்தை சசிகலா அணிக்கோ அல்லது ஓ.பன்னீர்செல்வம் அணிக்கோ ஒதுக்குவது இல்லை என்றும், அந்த சின்னத்தை முடக்கி வைப்பது என்றும் முடிவு செய்தது.
இந்த தகவல் நேற்று இரவு 11 மணிக்கு இரு அணியினருக்கும் தெரிவிக்கப்பட்டது.
அத்துடன் அ.தி.மு.க. என்ற கட்சியின் பெயரை இரு அணியினரும் பயன்படுத்தக்கூடாது என்றும் உத்தரவிட்டு உள்ளது.
இரு அணியினரும் தாங்கள் எந்த பெயரால் அழைக்கப்படவேண்டும் என்பதை இன்று (வியாழக்கிழமை) காலை 10 மணிக்குள் தெரிவிக்க வேண்டும் என்றும், சுயேச்சை சின்னங்களில் இருந்து ஏதாவது மூன்றை குறிப்பிட்டு அதில் ஒரு சின்னத்தை இன்று காலை பெற்றுக்கொள்ள்லாம் என்றும் தேர்தல் கமிஷன் அறிவித்தது.
இரு கட்சியினரும் தங்களிடம் உள்ள மற்ற ஆதாரங்களை தேர்தல் கமிஷனிடம் ஏப்ரல் 17-ந் தேதி கொடுத்து முறையிடலாம் என்றும் தேர்தல் கமிஷன் அறிவித்தது.
தேர்தல் கமிஷனின் இந்த முடிவு பற்றி தெரிய வந்ததும், இரு தரப்பினரும் தங்கள் அடுத்து கட்ட நடவடிக்கை குறித்து தனித்தனியாக அவசர ஆலோசனை மேற்கொண்டு உள்ளனர்.
முன்னதாக ஓ.பன்னீர்செல்வம் அணியின் சார்பில் மூத்த வக்கீல்கள் சி.எஸ்.வைத்தியநாதன், குரு கிருஷ்ணகுமார், மனோஜ் பாண்டியன், பாலாஜி சீனிவாசன் ஆகியோர் தேர்தல் கமிஷன் முன்பு ஆஜராகி தங்கள் தரப்பு கருத்துகளை தெரிவித்தனர்.
ஓ.பன்னீர்செல்வம் தரப்பில் முன்வைக்கப்பட்ட வாதங்கள் பற்றிய விவரம் வருமாறு:-
சட்ட விதிமுறைகளின் அடிப்படையில், சசிகலா ஊழல் வழக்கில் தண்டிக்கப்பட்டு சிறையில் இருக்கிறார். அ.தி.மு.க.வின் சட்ட விதிகளுக்கு உட்பட்டு அவர் பொதுச்செயலாளராக தேர்வு செய்யப்படவில்லை. அவருடைய நியமனமே தவறு என்ற நிலையில் அவரால் பரிந்துரைக்கப்படும் நபரை எப்படி வேட்பாளராக அங்கீகரிக்க முடியும்? அந்த வேட்பாளருக்கு இரட்டை இலை சின்னத்தை ஒதுக்கக் கோரும் படிவத்தில் சசிகலா எப்படி கையெழுத்திட முடியும்?
மேலும், ஊழல் வழக்கில் தண்டிக்கப்பட்ட சசிகலாவுக்கு தேர்தலில் நிற்பதற்கு தடை விதிக்கப்பட்டு உள்ளது. ஒருவர் தேர்தலில் நிற்பதற்கே தடை விதித்து உள்ள போது அவரால் முன்னிறுத்தப்படும் நபர் எப்படி தேர்தலில் போட்டியிட முடியும்? அவரால் எப்படி சின்னத்தை ஒதுக்குவதற்கான படிவங்களில் கையெழுத்திட முடியும்? அதற்கு சட்டரீதியான முகாந்திரம் கிடையாது.
இவை தவிர, கடந்த 2014-ம் ஆண்டில் அ.தி.மு.க. உட்கட்சி தேர்தல் முடிவடைந்ததும் அந்த தேர்தலில் தேர்ந்தெடுக்கப்பட்ட நிர்வாகிகளின் பட்டியலை தேர்தல் ஆணையத்துக்கு அனுப்பி வைத்தனர். அந்த பட்டியலில் பொதுச்செயலாளர் பதவிக்கு ஜெயலலிதா பெயர் உள்ளது. அதைத்தொடர்ந்து இரண்டாவதாக கட்சியின் மூத்த தலைவர் மதுசூதனன் அவைத்தலைவராக நியமிக்கப்பட்டதாகவும் உள்ளது.
எனவே, ஜெயலலிதாவின் மறைவை தொடர்ந்து கட்சியின் அடுத்த, மூத்த தலைவர் என்ற அடிப்படையில் மதுசூதனனுக்கே இரட்டை இலை சின்னத்தை கோருவதற்கு முழுமையான அதிகாரம் உள்ளது. மேலும் அவரே ஆர்.கே.நகர் தொகுதியின் வேட்பாளர் என்பதால் அவருக்குத்தான் இரட்டை இலை சின்னத்தை ஒதுக்க வேண்டும்.
தற்போது நாங்கள் 5,706 பிரமாண பத்திரங்களை தாக்கல் செய்து இருக்கிறோம். இதன் மூலம் 43 லட்சம் அ.தி.மு.க. உறுப்பினர்களின் ஆதரவையும் தேர்தல் கமிஷன் முன்பு கொடுத்து இருக்கிறோம். எனவே எங்கள் தரப்புக்குத்தான் இரட்டை இலை சின்னத்தை ஒதுக்க வேண்டும்.
இவ்வாறு ஓ.பன்னீர்செல்வம் தரப்பில் வாதங்கள் முன்வைக்கப்பட்டன.
பின்னர் சசிகலா தரப்பில் மூத்த வக்கீல்கள் சல்மான் குர்ஷித், அரிமா சுந்தரம், மோகன் பராசரன், வீரப்ப மொய்லி ஆகியோர் ஆஜரானார்கள். உதவிக்கு வக்கீல்கள் எஸ்.செந்தில், பி.வி.செல்வகுமார், திவாகர் ஆகியோரும் ஆஜராகி இருந்தனர். பாராளுமன்ற துணை சபாநாயகர் தம்பிதுரை, நவநீதகிருஷ்ணன் உள்ளிட்ட எம்.பி.க்களும் விசாரணையின் போது உடன் இருந்தனர்.
சசிகலா அணியினர் தரப்பில் முன்வைக்கப்பட்ட வாதங்கள் பற்றிய விவரம் வருமாறு:-
அ.தி.மு.க.வில் பிளவு எதுவும் கிடையாது. கருத்து வேற்றுமைகள் உள்ளன. அதே நேரத்தில் எங்கள் தரப்புக்குத்தான் பெரும்பான்மையான உறுப்பினர்களின் ஆதரவு உள்ளது. அவர்களிடம் பெரும்பான்மை கிடையாது. பெரும்பான்மையான எம்.எல்.ஏ.க்கள் மற்றும் எம்.பி.க்கள், பெரும்பாலான பொதுக்குழு உறுப்பினர்கள் எங்களுக்குத்தான் ஆதரவு அளிக்கின்றனர். சின்னத்தை தங்களுக்கு ஒதுக்குமாறு ஓ.பன்னீர்செல்வம் தரப்பில் கோருவதற்கு எந்த உரிமையும் கிடையாது.
ஓ.பன்னீர்செல்வம் தரப்பில் கூறுவது போல 43 லட்சம் உறுப்பினர்களின் ஆதரவு அவர்களுக்கு இருப்பதாக ஒரு வாதத்துக்கு எடுத்துக் கொண்டாலும், அ.தி.மு.க. கட்சியின் மொத்த உறுப்பினர்களின் எண்ணிக்கை சுமார் ஒன்றரை கோடி ஆகும். ஓ.பன்னீர்செல்வம் தரப்பே தங்கள் தரப்புக்கு 43 லட்சம் உறுப்பினர்களின் ஆதரவு உள்ளது என்றால், எங்களுக்கு ஒரு கோடி உறுப்பினர்களின் ஆதரவு உள்ளது என்பதை அவர்களே ஒப்புக் கொள்கிறார்கள். எனவே, எங்களுக்குத்தான் 1,912 பொதுக்குழு உறுப்பினர்களின் ஆதரவும், 122 எம்.எல்.ஏ.க்களின் ஆதரவும், 37 எம்.பி.க்களின் ஆதரவும் இருக்கிறது.
ஓ.பன்னீர்செல்வம் தரப்பின் மனுவை ஏற்றுக்கொள்ள முகாந்திரம் ஏதும் இல்லை. பொதுக்குழு கூட்டம் நடைபெற்ற போது பதிவு செய்யப்பட்ட 6 வீடியோ சி.டி.க்கள் தாக்கல் செய்யப்பட்டு உள்ளன. அந்த கூட்டத்தில் பொதுச்செயலாளர் நியமனத்துக்கு சசிகலாவின் பெயரை முன்மொழிந்ததே இவர்கள்தான். முன்மொழிந்தவர்களே புகார் அளித்துள்ள நிலையில் அந்த புகாரை ஏற்றுக்கொள்ள எந்த முகாந்திரமும் கிடையாது.
டி.டி.வி.தினகரனுக்கு இரட்டை இலை சின்னத்தை ஒதுக்கக்கூடாது என்றும், அவர் அ.தி.மு.க. உறுப்பினரே அல்ல என்ற வகையிலும் பன்னீர்செல்வம் தரப்பு வாதங்கள் அமைந்து இருந்தன. அவர் அ.தி.மு.க.வின் அடிப்படை உறுப்பினராக இணைந்து பல ஆண்டுகளாக சீரிய முறையில் கட்சிக்கு பணி புரிந்து, கட்சியின் எம்.பி.யாக இருந்து உள்ளார். தற்போது துணை பொதுச்செயலாளராகவும் பதவி வகித்து வருகிறார்.
இவ்வாறு சசிகலா தரப்பில் வாதங்கள் முன்வைக்கப்பட்டன.