முன்னைய அரசின்போது அரசியல் பழிவாங்கல்களால் பாதிக்கப்பட்ட ஐக்கிய தேசியக் கட்சி ஆதரவாளர்களின் விவரங்கள் கொண்ட பட்டியலொன்றை தனக்குச் சமர்ப்பிக்குமாறு பிரதமர் ரணில் விக்ரமசிங்க அதிகாரிகளுக்குப் பணிப்புரை விடுத்திருக்கின்றார்.
இவ்வாறு பழிவாங்கப்பட்டவர்களின் பிரச்சினைகள் பற்றி ஆராய தன்னால் ஏற்கனவே நியமிக்கப்பட்ட குழு இதுவரை மேற்கொண்ட நடவடிக்கைகள், வழங்கிய நிவாரணங்கள் ஆகியவை பற்றி அறிக்கையொன்றை சமர்ப்பிக்குமாறும் அவர் வேண்டுகோள் விடுத்திருக்கின்றார்.
நல்லாட்சி அரசு ஆட்சிபீடம் ஏறி இரண்டு வருடங்கள் பூர்த்தியாகவுள்ளபோதிலும் முன்னைய அரசின் பழிவாங்கல்களுக்கு உள்ளான தங்களுக்கு எவ்வித தீர்வும்
வழங்கப்படவில்லை என பாதிக்கப்பட்டவர்கள் தெரிவித்துள்ள முறைப்பாட்டையடுத்தே பிரதமர் இந்தப் பணிப்புரைகளை விடுத்திருக்கின்றார்.
இவர்களின் பிரச்சினைகளை ஆராய்வதற்காக நியமிக்கப்பட்ட குழுவுக்கு சுமார் 10 ஆயிரம் முறைப்பாடுகள் கிடைத்திருப்பதுடன், அவற்றுக்கான தீர்வுகளை வழங்குவதற்கு அமைச்சரவையும் அனுமதி வழங்கியிருந்தது.
எனினும், இதுவரை தங்களுக்கு எந்தவிதமான தீர்வுகளும் வழங்கப்படவில்லை என அவர்கள் பிரதமரிடம் முறையிட்டுள்ளனர் என தகவல்கள் தெரிவிக்கின்றன.