புங்குடு தீவு மாணவி வித்தியா படுகொலை வழக்கில் கைது செய்யப்பட்டு தடுத்து வைக்கப்பட்டுள்ள சந்தேகநபர்களில் ஒருவர் ஊர்காவற்துறை நீதவான் நீதிமன்ற நீதிபதிக்கு கடிதம் எழுதியுள்ளமை குறித்து மன்றில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
வித்தியா படுகொலை வழக்கில் கைது செய்யப்பட்டுள்ள 12 சந்தேகநபர்களும் இன்றைய தினம் யாழ். ஊர்காவற்துறை நீதவான் நீதிமன்ற நீதிபதி ஏ.எம்.எம்.றியாழ் முன்னிலையில் ஆஜர்படுத்தப்பட்டனர்.
இந்நிலையில், விசாரணைகள் இடம்பெற்றுக்கொண்டிருந்த போது, மன்றில் ஏதேனும் தெரிவிக்க விரும்புகின்றீர்களா..? என சந்தேகநபர்களிடம் நீதிபதி வினவியிருந்தார்.
இதன் போது மன்றில் ஆஜராகியிருந்த நான்காவது சந்தேகநபர் “தனக்கு சுகயீனம் காரணமாக நேற்றைய தினம் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டிருந்தேன்”
“எனினும் முழுமையாக சிகிச்சை பெற்றுக்கொள்ளும் முன்னதாக இன்றைய தினம் நீதிமன்றுக்கு கூட்டிபோக வேண்டும் என தெரிவித்து வைத்தியசாலையில் அனுமதிக்காது இங்கு அழைத்து வந்துவிட்டனர்” என தெரிவித்தார்.
இதனையடுத்து, வித்தியா கொலை வழக்கின் 9வது சந்தேகநபரான மகாலிங்கம் சசிக்குமார் மன்றில் கருத்து தெரிவிக்கையில், “சிறையிலிருந்து தான் நீதவானுக்கு கடிதம் ஒன்று அனுப்பியிருந்தேன்”
எனினும், அந்த கடிதத்திற்கு பதில் எதுவும் கிடைக்கில்லை என நீதிமன்றில் தெரிவித்துள்ளார். இதற்கு பதிலளித்து பேசிய நீதிபதி,
“சந்தேகநபர் ஒருவர் நீதிவானுக்கு கடிதங்கள் அனுப்ப முடியாது. எதுவும் தெரிவிக்க வேண்டுமாயின் நீதிமன்றில் தெரிவிக்க வேண்டும்” என குறிப்பிட்டார்.
இதேவேளை, 2015ஆம் ஆண்டு மே மாதம் 13ஆம் திகதி வன்புணர்வுக்குட்படுத்தி புங்குடு தீவு மாணவி வித்தியா படுகொலை செய்யப்பட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.