இலங்கையின் முன்னணி சிங்கள வானொலி நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்பதற்காக வானொலி சேவைக்கு சென்றிருந்த பாதாள உலகக்குழு உறுப்பினரை பொலிஸார் கைது செய்துள்ளனர்.
ஆர்மி ரொசான் என்ற பாதாள உலகக்குழு உறுப்பினரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளார்.பம்பலப்பிட்டி பகுதியில் அமைந்துள்ள தனியார் வானொலி நிலையத்திற்கு சென்றிருந்த ஆர்மி ரொசானை பொலிஸார் கைது செய்துள்ளனர்.
ஆர்மி ரொசான், அங்கொட லொக்கா என்னும் பாதாள உலகக்குழுத் தலைவரின் குழுவின் உறுப்பினர் என்பது குறிப்பிடத்தக்கது.
பாதாள உலகக்குழு உறுப்பினர் ஒருவர் வானொலி நிகழ்ச்சியில் பங்கேற்றிருப்பதாக, பொதுமகன் ஒருவர், பொலிஸ் அவசர அழைப்பு இலக்கமான 119க்கு அழைப்பினை ஏற்படுத்தி தெரிவித்துள்ளார்.
இந்த அழைப்பின் அடிப்படையில் செயற்பட்ட பொலிஸார் பம்பலப்பிட்டியில் அமைந்துள்ள தனியார் வானொலி நிலையத்தை முற்றுகையிட்டு நுட்பமான முறையில் ஆர்மி ரொசானை நேற்று முன்தினம் இரவு கைது செய்துள்ளனர்.
ஆர்மி ரொசான் இராணுவத்திலிருந்து தப்பியோடியவர் என்பது குறிப்பிடத்தக்கது.ஆர்மி ரொசான், முன்னதாக சமயங் குழுவில் அங்கம் வகித்து பின்னர் அங்கொட லொக்கா குழுவில் இணைந்து கொண்டவர் என்பது விசாரணைகளின் மூலம் தெரியவந்துள்ளது.
சமயங் கொலை செய்யப்பட்ட மகிவும் சிறந்த விடயம் என குறித்த வானொலிச் சேவைக்கு ஆர்மி ரொசான் செவ்வி வழங்கியுள்ளார்.அங்கொட லொக்கா தரப்பே இந்த கொலையை மேற்கொண்டதாகத் தெரிவித்துள்ளார்.
ஆர்மி ரொசானிடம் பொலிஸார் விரிவான விசாரணைகளை நடத்தி வருகின்றனர்.
இதேவேளை, சமயங் கொலையுடன் தொடர்புடைய பத்தரமுல்லே பன்டி என்வரை செல்லக்கதிர்காமத்தில் வைத்து நேற்று பொலிஸார் கைது செய்துள்ளனர்.
சமயங் உள்ளிட்ட 7 பேர் கொலைச் சம்பவத்தின் முக்கிய சந்தேக நபராக பன்டி கருதப்படுகின்றார் என்பது குறிப்பிடத்தக்கது.