பிரபாஸ், ராணா, அனுஷ்கா, தமன்னா, சத்யராஜ், ரம்யா கிருஷ்ணன், நாசர் உள்ளிட்ட பலரும் இப்படத்தில் நடித்துள்ளனர். சமீபத்தில் இப்படத்தின் டிரெய்லர் வெளியாகி பல்வேறு சாதனைகளை முறியடித்துள்ளது. இந்திய அளவில் அதிக பார்வையாளர்கள் பார்த்த டிரெய்லர் என்ற சாதனை படைத்துள்ளது.
தெலுங்கில் மட்டும் இதுவரை 33 லட்சம் பார்வையாளர்களும், இந்தியில் 30 லட்சம் பார்வையார்களும் டிரெய்லரை கண்டுகளித்துள்ளனர். இந்தியில் டப்பிங் செய்யப்படும் ஒரு படத்திற்கு இவ்வளவு ரசிகர்கள் இருப்பது இதுவே முதல்முறை என்பது குறிப்பிடத்தக்கது. தமிழகத்தில் 5 லட்சம் பேரும், மலையாளத்தில் 1 லட்சம் பேரும் பாகுபலி 2 டிரெய்லரை பார்த்துள்ளனர்.
ரிலீசுக்கு முன்பே ரூ.500 கோடி விலைபோன, இப்படத்தின் இந்தி சாட்லைட் உரிமையை சோனி குழுமம் கைப்பற்றியுள்ளது. தமிழ், தெலுங்கு, மலையாளம் என 3 மொழிகளுக்கான சாட்டிலைட் உரிமையை ஸ்டார் குழுமம் வாங்கியுள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளது.
இப்படத்தின் தமிழக திரையரங்கு உரிமையை கே புரொடக்ஷன்ஸ் சார்பில் ராஜாராஜன் வாங்கி உள்ளார். தமிழ், தெலுங்கு, இந்தி மற்றும் மலையாளம் என 4 மொழிகளில் வெளியாக உள்ள இப்படம் இந்தியா முழுவதும் 6500 திரையரங்குகளில் ரிலீசாகி புதிய சாதனை படைக்க உள்ளது. இந்தியா தவிர்த்து மற்ற நாடுகளில் 1750 திரையரங்குகளில் ரிலீசாக உள்ள பாகுபலி 2, அமெரிக்காவில் மட்டும் 750 திரைகளில் வெளியாகிறது.
தென்னிந்திய மொழித் திரைப்படம் ஒன்று ஐமேக்ஸ் வீடியோ வடிவில் வருவது இதுவே முதல்முறை என்பதும் குறிப்பிடத்தக்கது.