மன்னார் மாவட்டம் மடுப் பிரதேசத்தில் 48 ஏக்கர் நிரப்பரப்பை சிறிலங்கா இராணுவத்தினர் அபகரித்து வைத்துள்ளதாக மக்கள் குற்றஞ்சாட்டியுள்ளனர்.
வவுனியாவை தளமாகக் கொண்டு இயங்கும் அன்புக்கும் நட்புக்குமான வலையமைப்பு எனும் அமைப்பானது, குறித்த பிரதேச செயலக பிரிவில் பாதுகாப்பு தரப்பால் கையகப்படுத்தப்பட்டுள்ள காணி விபரங்களை தருமாறு கோரி தகவல் அறியும் சட்டத்தின் மூலம் விண்ணப்பித்திருந்தது. குறித்த விண்ணப்பத்திற்கு பதிலளிக்கும் வகையில் பிரதேச செயலகத்தால் அனுப்பி வைக்கப்பட்டுள்ள கடிதத்திலேயே மேற்படி தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதன்படி தம்பன்னைக் கிராமத்தில் ஒரு ஏக்கர் காணியும், பரசன்குளம், தட்சணாமருதமடு, தம்பனைக்குளம், பன்னவெட்டுவான், மடுவீதி ஆகிய இடங்களில் உள்ள அரச காணிகள் 27 ஏக்கரை இராணுவமும், தம்பனைக்குளம் மற்றும் மடு வீதி ஆகியவற்றில் காணப்படும் 6 ஏக்கர் அரச காணியை காவல்துறையினரும் கையகப்படுத்தியுள்ளனர்.
அத்துடன் சின்னப் பண்டிவிரிச்சான், தட்சினா மருதமடு, கீரிசுட்டான் ஆகிய பிரதேசங்களில் 14ஏக்கர் காணியையும் இராணுவம் அபகரித்துள்ளது. இவ்வாறாக மடு பிரதேச செயலர் பிரிவில் 48 ஏக்கர் நிலப்பரப்பு இராணுவத்தினரால் அபகரிக்கப்பட்டுள்ளது.