நடிகை நயன்தாரா, நடிகர் தம்பிராமையா நடித்துள்ள ‘டோரா’ என்ற திரைப்படம் விரைவில் வெளியாக உள்ளது. இந்த படத்தின் கதை, திரைக்கதை தனக்கு சொந்தமானது என கூறி சினிமா இணை இயக்குனர் நாடிமுத்து என்பவர் சென்னை சிட்டி சிவில் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளார்.
அதில், ‘2013-ம் ஆண்டு ‘நீயும் நானும்’ என்ற தலைப்பில் கதை, திரைக்கதை எழுதியிருந்தேன். அதை படமாக எடுப்பதாக கூறிய தயாரிப்பாளர் நேமிசந்த் ஜபக், என் கதையை வாங்கி படித்து விட்டு மறுநாள் திருப்பித்தந்தார்.
பின்னர், என் கதையின் தலைப்பை மட்டும் மாற்றி விட்டு, ‘டோரா’ என்ற பெயரில் என் கதையை திரைப்படமாக தயாரித்துள்ளார். இந்த படத்தை வெளியிட அனுமதித்தால் அது எனக்கு பெருத்த பாதிப்பை ஏற்படுத்தும். அதனால், படத்தை வெளியிட தடை விதிக்க வேண்டும்’ என்று கூறியிருந்தார்.
இந்த மனு 16-வது உதவி சிட்டி சிவில் கோர்ட்டு நீதிபதி சாந்தி முன் விசாரணைக்கு வந்தது. மனுவை விசாரித்த நீதிபதி, தயாரிப்பாளர் நேமிசந்த் ஜபக் நேரிலோ அல்லது வக்கீல் மூலமாகவோ நாளை (24-ந் தேதி) ஆஜராக வேண்டும் என்று உத்தரவிட்டார்.