மன்னர் ஒருவர் இருந்தார். அவருக்கு தாங்க முடியாத தலைவலி வந்து விட்டது. அமைச்சர்கள், வைத்தியர்கள், அனைவரும் பல முறையிலும் குணமாக்க முயன்றும் முடியவில்லை. காட்டிலிருந்து முனிவரை அழைத்து வந்தால் சரியாகி விடும் எனக்கூறி அழைத்து வந்தனர். முனிவர், மன்னரை பார்த்து விட்டு, ‘மருந்துகள் உன்னை குணமாக்க முடியாது மன்னா!
ஆனால், நீங்கள் பார்க்கும் இடமெல்லாம் பசுமையாக இருக்கும் படி பார்த்துக்கொள்ளுங்கள்,’ என்றார். உடனே அரசு ஆணை பிறப்பிக்கப்பட்டது. அரண்மனை முழுவதும் பச்சை வர்ணம் பூசப்பட்டது. மக்களுக்கும் ஆணை அறிவிக்கப்பட்டு நாடு முழுவதும் பசுமை புரட்சி ஏற்படுத்தப்பட்டது. சிறிது நாளில் மன்னனின் தலைவலி நீங்கியது.
ஒருநாள் முனிவர் மன்னனை பார்க்க வந்தார். மன்னனை பார்த்து, ‘அரசே! அரண்மனைக்கு உங்களிடம் வர்ணம் பூச சொன்னது யார்? என்று கேட்க, ‘நீங்கள் தானே’ என்றார் மன்னர். உங்கள் பார்வையை மாற்றிக்கொண்டால் போதாதா? என்றார் முனிவர். என்ன சொல்கிறீர்கள்? ஆம். ஒரு பச்சைநிற கண்ணாடியை அணிந்து கொண்டால் போதுமே, பார்க்கிற யாவும் பச்சையாக தெரியுமே. பணத்தை வீணாக செலவு செய்து விட்டீர்கள் என்றார் முனிவர்.
வாழ்க்கையை மாற்ற விரும்புகிறவர்கள் இந்த உலகத்தை பார்க்கிற பார்வையை மாற்றிக்கொள்வோம். மன்னரை போல பிறரை மாற்ற முயற்சி செய்வது வெற்றி பெறாது. குறுகிய காலத்திற்கு வேண்டுமானால் சரியாக இருக்கலாம். எனவே, மற்றவர்களை மாற்ற முயற்சிக்காமல் நம்மையே நாம் மாற்றிக்கொள்ள இந்த தவக்காலத்தில் முயற்சி செய்வோம்.
“தீயவரோ தாம் செய்த பாவங்கள் அனைத்தையும் விட்டு மனம் மாறி, என் நியமங்கள் அனைத்தையும் கைக்கொண்டு, நீதியையும் நேர்மையையும் கடைப்பிடித்தால் அவர்கள் வாழ்வது உறுதி” (எசேக்கியேல் 18:21)
“தீமைக்கு பதில் தீமை செய்யாதீர்கள்; எல்லா மனிதரும் நலமென கருதுபவை பற்றியே எண்ணுங்கள். தீமை உங்களை வெல்ல விடாதீர்கள். நன்மையால் தீமையை வெல்லுங்கள்!” (உரோமையர் 12:17-21) என தூய பவுல் கூறுகின்றார். அடுத்தவருடைய நன்மைக்காகவும், வளர்ச்சிக்காகவும் செயல்பட்டு மீட்பர் இயேசுவின் ஆசீர் பெறுவோம்.