ஈழத்தமிழர்களுக்கான நிகழ்ச்சி என்ற காரணத்தினால் மட்டுமே சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த் யாழ் வர சம்மதித்துள்ளதாக இந்திய ஊடகம் ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது.
அடுத்த மாதம் இலங்கைக்கு விஜயம் மேற்கொள்ள உள்ள சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த் யாழ்ப்பாணத்திற்கு வருகைத்தரவுள்ளார்.
2009ஆம் ஆண்டு இடம்பெற்ற யுத்தத்தின் போது பாதிக்கப்பட்ட இடங்களையும் மக்களையும் சந்திக்கும் முகமாக இந்த விஜயம் இடம்பெறவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
அந்தவகையில் எதிர்வரும் ஏப்ரல் மாதம் 9ஆம் 10ஆம் திகதிகளில் இலங்கையில் இடம்பெறவுள்ள லைகா நிறுவனத்தின் ஞானம் அறக்கட்டளையின் சார்பில் வவுனியாவில் அமைக்கப்பட்டுள்ள 150 புதிய வீடுகளை தமிழ் மக்களிடம் ஒப்படைக்கும் நிகழ்ச்சியில் ரஜினிகாந்த் கலந்து கொண்டு, வீடுகளை மக்களிடம் வழங்கவுள்ளார்.
குறித்த நிகழ்ச்சியில் வடக்கு முதல்வர் சீ.வி.விக்னேஸ்வரன், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா . சம்பந்தன், மலேசிய செனட் தலைவர் எஸ்.விக்னேஸ்வரன், பிரிட்டன் அனைத்துக் கட்சி தமிழ் பாராளுமன்ற குழுத் தலைவர் ஜேம்ஸ் பெர்ரி, ஜஸ்டிஸ் கமிட்டி உறுப்பினர் கீத் வாஸ் ஆகியோர் பங்கேற்க உள்ளமை குறிப்பிடத்தக்கது.