சிம்பு நடிப்பில் உருவாகிவரும் ‘அன்பானவன் அசராதவன் அடங்காதவன்’ படத்தில் சிம்பு மூன்று கெட்டப்புகளில் நடித்து வருகிறார் என்பது அனைவருக்கும் தெரிந்ததே. இந்த படத்தில் சிம்பு அஸ்வின் தாத்தா என்ற கதாபாத்திரத்தில் வயதான தோற்றத்தில் நடித்திருக்கிறார். திரையில் தாத்தாவாக நடிக்கும் சிம்பு, நிஜத்தில் மாமாவாகியுள்ளார்.
சிம்புவின் தங்கையான இலக்கியாவுக்கு கடந்த 2014-ஆம் ஆண்டு ஐதராபாத்தை சேர்ந்த அபிலாஷ் என்பவருடன் திருமணம் நடந்தது. இந்நிலையில், கர்ப்பமாக இருந்த இலக்கியா நேற்று சென்னை மருத்துவமனையில் பிரசவத்திற்காக சேர்க்கப்பட்டார். இன்று காலை அவருக்கு அழகான ஆண் குழந்தை பிறந்துள்ளது.
தனக்கு மருமகன் பிறந்த சந்தோஷத்தில் தனது அப்பா டி.ராஜேந்தர், அம்மா உஷா ராஜேந்தர் ஆகியோருடன் மருத்துவமனை ஊழியர்களுக்கு இனிப்பு வழங்கி கொண்டாடியுள்ளார் சிம்பு. தாயும், சேயும் தற்போது நலமாக உள்ளதாக மருத்துவமனை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. விரைவில், இலக்கியா வீடு திரும்ப உள்ளதாகவும் கூறப்படுகிறது.