தேசிய சுதந்திர முன்னணியின் தலைவரான விமல் வீரவங்ச பிணை கிடைக்காத நிலையில், வேறு ஒரு மறைமுகமான நடவடிக்கைக்கு வழியை ஏற்படுத்திக் கொள்ளும் வகையில் நேற்று முதல் சிறைச்சாலையில் உண்ணாவிரதப் போராட்டத்தை ஆரம்பித்துள்ளதாக குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.
ஐ.நாவுக்கு எதிராக வீரவங்ச உண்ணாவிரதப் போராட்டம் ஒன்றை முன்னர் நடத்தினார். தும்முல்லை சந்தியில் நடந்த இந்த உண்ணாவிரதப் போராட்டத்தின் போது வீரவங்ச, லெமன் பஃப் பிஸ்கட் சாப்பிட்டு விட்டு உண்ணாவிரதப் போராட்டத்தை நடத்தியதாக அப்போது பேசப்பட்டது.
இவ்வாறான முறையை அறிமுகப்படுத்திய வீரவங்ச தற்போது தந்திரமான திட்டத்தின் அடிப்படையிலேயே உண்ணாவிரதப் போராட்டத்தை ஆரம்பித்துள்ளதாக அரசியல் தரப்புத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
இந்த நிலையில், விமல் வீரவங்ச இன்றைய தினம் நீதவான் நீதிமன்றத்தில் பிணை கோரி மனுவொன்றை தாக்கல் செய்ய உள்ளதாகவும் இதன் போது அரசு சார்பில் ஆஜராகும் சட்டத்தரணி பிணை வழங்க எதிர்ப்பில்லை என அறிவிக்க உள்ளதாகவும் கூறப்படுகிறது.
இந்த திட்டத்தில் ஒரு மறைமுக சக்தி இருப்பதாக கூறப்படுகிறது. இந்த மறைமுக சக்தியை மறைப்பதற்காகவே வீரவங்ச தந்திரமான முறையில் உண்ணாவிரதப் போராட்டத்தை தொடங்கியுள்ளதாக பேசப்படுகிறது.
உண்ணாவிரதப் போராட்டம் காரணமாகவே வீரவங்சவுக்கு பிணை கிடைத்ததாக மக்கள் நினைப்பார்கள் எனவும் இதன் மூலம் பிணை வழங்க உதவிய மறைமுக சக்தி பற்றிய தகவல் மறைக்கப்படும் சூழ்ச்சி இருப்பதாகவும் கூறப்படுகிறது.
எது எப்படி இருந்த போதிலும் மேல் நீதிமன்றம் பிணை வழங்க மறுத்துள்ளதால், நீதவான் நீதிமன்றத்தினால் பிணை வழங்க முடியாது.
இன்றைய தினம் பிணை கிடைக்காது போனால், வீரவங்ச உண்ணாவிரதப் போராட்டம் என்ற துரும்பை பயன்படுத்தி வைத்தியசாலையில் சேர்ந்து விளக்கமறியல் காலத்தை கழிக்க திட்டமிட்டுள்ளதாக அரசியல் தரப்பில் பேசப்படுகிறது.
உண்ணாவிரதப் போராட்டம் நடத்தும் ஒருவர் இரண்டு தினங்களில் கட்டாயம் வைத்தியசாலையில் அனுமதிக்கப்படுவார்.
மருத்துவர்களின் உதவியுடன் தொடர்ந்தும் வைத்தியசாலையில் தங்கியிருக்க வீரவங்ச திட்டமிட்டுள்ளதாக தெரியவருகிறது.