மக்கள் மேற்கொள்ளும் எல்லாவகைப் போராட்டத்திற்கும் இராணுவ ஆக்கிரமிப்பே அடிப்படையாகும் என பாராளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறீதரன் தெரிவித்துள்ளார்.
கிளிநொச்சி கனகாம்பிகைக்குளம் அம்பாள் நகர் கிராம அமைப்புக்களின் பிரதிநிதிகளை சந்தித்து கலந்துரையாடியபோதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.
அங்கு தொடர்ந்தும் கருத்து தெரிவித்த அவர், கிராமப்புறங்கள் சார்ந்து பல்வேறு விதமான அபிவிருத்தி தேவைகளுக்கு நாங்கள் முகம் கொடுக்கவேண்டியிருக்கிறது.
வீதிகள் விவசாய கால்வாய்கள் இந்தப்பகுதிகளில் மோசமாக காணப்படுகிறது.
வறுமை, தொழிலின்மை அதிகரித்திருக்கின்றது. மக்கள் தமது ஜீவனோபாய செழிப்பிற்காக பல்வேறு சிரமங்களை எதிர்கொண்டு வருகிறார்கள்.
இது ஒருபுறம் இருக்க எங்களுடைய மக்கள் தங்களால் கையளிக்கப்பட்ட பிள்ளைகள் எங்கே? என்று போராடுகிறார்கள். தங்களை சொந்தக்காணிகளில் குடியமர விடுமாறு போராடுகிறார்கள். சிறைக்கைதிகளை விடுமாறு போராடுகிறார்கள்.
ஜெனிவாத்தீர்மானங்களை அரசு நடைமுறைப்படுத்த தவறியமையினாலே காலஅவகாசத்தில் தமக்கு நம்பிக்கை இல்லை எனப்போராடுகிறார்கள்.
இரணைதீவிலும் இரணைமடுவிலும் மீன் பிடிக்க முடியவில்லை என்று மீனவர்கள் போராடுகின்றார்கள்.
சாந்தபுரத்தில் ஆடுமேய்க்கச்சென்ற அம்மாவின் கழுத்தை தனக்கு முகப்பரீட்சயமான இராணுவமே வெட்டியதாக மயிரிழையில் உயிர்தப்பிய அம்மாவே கூறுகிறார்.
எங்களைச்சுற்றி என்ன நடக்கிறது என்பதை சிந்தித்து பாருங்கள் எங்களைச்சுற்றி நடக்கின்ற எல்லாவகைப்போராட்டங்களிற்கும் மூலகாரணமாக இராணுவ ஆக்கிரமிப்பே விளங்குகிறது.
இராணுவம் எமது மண்ணை விட்டு வெளியேறாத வரை எங்களது பிரச்சினைகள் ஒரு நச்சுவட்டம் போல மீள் எழுந்து கொண்டேயிருக்கும். நாங்கள் எங்களுடைய ஒற்றுமையை பலமாக்கிக்கொள்ளவேண்டிய தருணம் இது.
எமது மக்களின் அபிலாசைகள் பூர்த்தி செய்யப்படக்கூடிய நீடித்து நிற்கக்கூடிய அரசியல்த்தீர்வொன்றை நாம் அடைகின்றபோது எல்லாப்பிரச்சினைகளுக்கும் தீர்வு கிடைக்கும் அபிவிருத்திசெயற்பாடுகளும் விரைந்து நடக்கும் என மேலும் தெரிவித்தார்.