கொழும்பிலிருந்து வவுனியா நோக்கி பயணித்த அரச பேருந்து மீது இனந்தெரியாத நபர்கள் மேற்கொண்ட தாக்குதலில் ஐவர் காயமடைந்த நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
இச் சம்பவம் தொடர்பாக மேலும் தெரியவருகையில்,
கொழும்பிலிருந்து நேற்று (23) மாலை 4.45மணியளவில் வவுனியா நோக்கி பயணித்த அரச பேருந்து இரவு 10.30 மணியளவில் அனுராதபுரத்தினை அண்மித்தது. இதன் போது கொழும்பிலிருந்து வவுனியா நோக்கி பயணித்த தனியார் பேருந்துக்கும் அரச பேருந்துக்கும் இடையே போட்டித்தன்மை ஏற்ப்பட்டுள்ளது. அனுராதபுரம் உலுக்குளம் பகுதியில் வைத்து அரச பேருந்தினை தனியார் பேருந்து முந்திச் சென்று 2 நிமிடங்களில் அரச பேருந்தின் மீது கல்வீச்சு தாக்குதல் மேற்கொள்ளப்பட்டுள்ளது.
இத் தாக்குதலில் அரச பேருந்தின் சாரதி உட்பட ஐவர் காயமடைந்த நிலையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
இச் சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை அனுராதபுரம் பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.