தமிழ்த்திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்க தேர்தல் சூடுபிடித்துள்ளது. தலைவர் பதவிக்கு விஷால் களம் இறங்கியுள்ளார்.
இது குறித்து பல படங்களை தயாரித்தவரும், தியேட்டர் அதிபரும் வினியோகஸ்தருமான கண்ணப்பன் அளித்த பேட்டி…
‘‘ஆந்திராவில் ஒரு படத்தின் சம்பளத்தை பெரிய ஹீரோக்கள் மொத்தமாக வாங்குவது இல்லை. சில ஹீரோக்கள் சம்பளத்துக்கு பதில் ஏரியா வாங்கிக் கொள்கிறார்கள். சிலர் சிறிது, சிறிதாக வாங்கிக் கொள்கிறார்கள். இந்த நடைமுறை தமிழ் சினிமாவில் வர விஷால் உறுதிமொழி கொடுப்பாரா?
பெரும்பாலான நடிகர்கள் வெளியூர் படப்பிடிப்பில் தங்கள் காருக்கு பெட்ரோல் கேட்கிறார்கள். நடிகர்கள் தயாரிப்பாளர் செலவில் தான் சாப்பிடுகிறார்கள். தங்கள் உதவியாளர்கள், மேக்கப், ஹேர்டிரசருக்கு கூட பேட்டா கொடுக்க தயாரிப்பாளர்களிடம் பணம் வாங்குகிறார்கள்.
கோடிக்கணக்கில் சம்பளம் வாங்குபவர்கள் அதை கூட கொடுக்கக்கூடாதா? பைக்கில் சென்று ஓட்டு வேட்டை நடத்துகிறார் விஷால். படப்பிடிப்புக்கும் ஹெல்மெட் மாட்டிக் கொண்டு வந்தால் எவ்வளவு செலவு மிச்சம். நடிகர்களில் நாசர் ஆட்டோவிலே படப்பிடிப்பு தளம் வருவார். நடிகர் சத்யராஜ் கேரவன் கேட்கமாட்டார். சம்பளத்தை மிரட்டி வாங்க மாட்டார்.
அந்த மாதிரி மற்ற நடிகர்களும் மாற விஷால் நடவடிக்கை எடுக்க வேண்டும். உறுதிமொழி கொடுக்க வேண்டும். அப்படி செய்தால் நானே அவருக்காக பிரசாரம் செய்வேன். தியேட்டர்களில் வெள்ளி, சனி, ஞாயிறு மட்டுமே ஓரளவு கூட்டம் வருகிறது. மற்ற நாட்களில் 100-க்கும் குறைவான ஆட்களே படம் பார்க்க வருகிறார்கள். அப்படி இருக்க ஹீரோக்கள் எதுக்காக இவ்வளவு பில்டப் கொடுக்கிறார்கள் என்றார்.