தேர்தல் காலங்களில் ஊடகங்களில் பல்வேறுபட்ட நிகழ்ச்சிகள் ஒளிபரப்பாகின்றன. எனவே, அவை அனைத்திற்கும் பொறுப்புக்கூற வேண்டிய அவசியம் எமக்கில்லை என முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.
கடந்த ஜனாதிபதி தேர்தல் காலத்தில் தேசிய தொலைக்காட்சியில் விளம்பரம் செய்து அதற்கான பணத்தை செலுத்தாமை தொடர்பில் வாக்குமூலம் அளிப்பதற்காக பாரிய ஊழல் மோசடி குறித்து விசாரணை செய்யும் ஜனாதிபதி ஆணைக்குழுவில் முன்னிலையான பின்னர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கையிலேயே அவர் இவ்வாறு குறிப்பிட்டார்.
அங்கு தொடர்ந்து தெரிவித்த அவர், தொலைக்காட்சி நிறுவனங்கள் நாள்தோறும் பல அரசியல் நிகழ்ச்சி நிரல்களை தொலைக்காட்சிகளில் ஒளிபரப்பிக் கொண்டிருக்கின்றன. அதேபோல் கடந்த காலங்களிலும் ஒளிபரப்பாகியிருக்கலாம். எனவே அவை அனைத்திற்கும் நாம் பொறுப்புக்கூற வேண்டிய அவசியம் இல்லை. ஆனால், தேர்தல் பிரசார நடவடிக்கைகளுக்காக நான் அரச ஊடகங்களை முறையற்ற வகையில் பயன்படுத்தவில்லை.
2015ஆம் ஆண்டு தேர்தல் காலத்தில் அரச தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகிய தேர்தல் விளம்பரம் தொடர்பில் இதற்கு முன்னரும் பாரிய ஊழல் மோசடி குற்றச்சாட்டுகளை விசாரணை செய்யும் ஜனாதிபதி ஆணைக்குழு என்னிடம் வாக்குமூலம் பெற்றுக்கொண்டது. மற்றுமொரு அரச தொலைக்காட்சி சேவையில் ஒளிபரப்பாகிய தேர்தல் விளம்பரம் தொடர்பில் இன்றும் வாக்குமூலம் பெறப்பட்டுள்ளது. தொடர்ந்தும் இவ்வாறான முறைப்பாடுகளை முன்வைத்து விசாரணை நடத்தலாம். இருந்தபோதிலும் இது பற்றி நான் அலட்டிக்கொள்ளப் போவதில்லை எனக் குறிப்பிட்டுள்ளார்.