முன்னாள் பிரதி அமைச்சர் கருணா என்றழைக்கப்படும் விநாயகமூர்த்தி முரளிதரன் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பிற்கு சவால் ஒன்றை விடுத்துள்ளார்.
அரசியல் ஆளுமை தமிழ்த் தேசியக் கூட்டமைப்பில் உள்ளவர்களுக்கு இருந்தால் கும்புறுமூலை மதுபான உற்பத்தித் தொழிற்சாலையின் நிர்மாணப் பணிகளை நல்லாட்சியிடம் கூறி நிறுத்திக் காட்டுங்கள் என சுட்டிக்காட்டியுள்ளார்.
தற்போது பரவலாக பேசப்படும் கும்புறுமூலை மதுபான உற்பத்தித் தொழிற்சாலை விவகாரம் தொடர்பில் ஊடக சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.
அவர் மேலும் கருத்து தெரிவிக்கையில்,
கடந்த காலங்களில் நாங்கள் ஆட்சியில் இருந்த போது புதிய மதுபானசாலைகள் அமைப்பதில்லை என்ற முடிவினை எடுத்து அதனை அமுல்படுத்தியிருந்தோம்.
ஆனால் இந்த நல்லாட்சி அரசாங்கத்தில் புதிய மதுபான உற்பத்தித் தொழிற்சாலைகள் நிர்மாணிக்கப்பட்டு வருகின்றன.
அந்தவகையில் தற்போது நல்லாட்சி அரசாங்கத்துடன் இணைந்து கொண்டு மக்களுக்கு சேவை செய்து வருவதாக கூறும் மட்டக்களப்பைப் பிரதிநிதித்துவப்படுத்தும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினர் இந்த நிர்மாணப் பணிகளை நிறுத்திக் காட்ட வேண்டும். என சவால் விடுத்துள்ளார்.
மேலும் குறித்த மதுபான உற்பத்தித் தொழிற்சாலையானது 450 கோடி ரூபா முதலீட்டில் நிர்மாணிக்கப்பட்டு வருவதாகவும், இந்த பணிகளில் ஐக்கிய தேசிய கட்சியின் ஆதரவாளர்களுக்கு தொடர்பு இருப்பதாக சீனித்தம்பி யோகேஸ்வரன் பாராளுமன்றத்தில் தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.