இலங்கையில் நடைபெற்ற போர்க்குற்றங்களுக்கு சர்வதேச பிரதிநிதிகளின் பங்களிப்புடன் கலப்பு நீதிமன்றம் அமைக்கப்பட்டு விசாரணைகள் நடைபெறாது என்று பிரதமர் ரணில் விக்ரம சிங்க மீண்டும் தெளிவாக கூறியிருக்கின்றார்.
போர்க்குற்ற விசாரணைகள் தொடர்பாக அரசாங்கம் மீண்டும் மீண்டும் தெளிவாக தமது நிலைப்பாட்டை வெளிப்படுத்தி வருகின்றது.
அரசாங்கத்தின் இந்த நிலைப்பாட்டை எதிர்த்தும், தமிழ் மக்களின் நீதிக்கான எதிர்பார்ப்பை இடித்துரைத்தும் போராட வேண்டிய தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைமைகள் ஏன் இத்தனை மௌனமாக நாடாளுமன்றத்திற்குள் அமர்ந்திருக்கின்றார்கள் என்பதுதான் யாருக்கும் புரியவில்லை.
ஐக்கிய நாடுகள் சபையில் மனித உரிமை ஆணைக்குழுவின் 34ஆவது கூட்டத் தொடர் நடைபெற்றுக்கொண்டிருக்கும் நிலையில், இலங்கையில் போர்க்குற்றங்களாலும், மனித உரிமை மீறல்களினாலும் பாதிக்கப்பட்ட மக்களின் சார்பாக அழுத்தமான கோரிக்கைப் பதிவுகள் எவையும் முன்வைக்கப்படவில்லை.
இலங்கை தொடர்பான பிரேரணையை விவாதிக்கும் உப குழுக் கூட்டத்தில்,இலங்கையிலிருந்து வடக்கு மாகாணசபையின் உறுப்பினர்களான சிவாஜிலிங்கம்,அனந்தி, தியாகராஜா மயூரன் ஆகியோரும், கஜேந்திரகுமார் பொன்னம்பலமும் கலந்து கொண்டிருந்தனர். நாடு கடந்த தமிழீழ அரசாங்கத்தின் பிரதிநிதிகள் சிலரும் அங்கு பிரசன்னமாகியிருந்தனர்.
வடக்கு மாகாணசபை உறுப்பினர்கள் எனும்போதுதமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பட்டியலில் போட்டியிட்டு மாகாணசபைக்கு தெரிவாகி இருந்தாலும், தற்போது தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் வழி நடத்தலையோ, உத்தரவுகளையோ அவர்கள் மதித்து நடப்பதில்லை. அவர்களைக் கட்டுப்படுத்தும் ஆளுமையும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைமைகளிடம் இல்லை.
இந்த நிலையில் வடக்கு மாகாணசபையின் உறுப்பினர்கள் ஜெனிவாவுக்கு பயணமானதே தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைமையின் சம்மதத்துடன் அல்ல. அதாவது தலைமைக்குத் தெரியாமல் அல்லது தனிப்பட்ட பயணமாகவே இவர்கள் சில புலம்பெயர்ந்த அமைப்புக்களின் செலவில் ஜெனிவாவுக்கு பயணமாகி இருக்கின்றார்கள்.
ஆகவே ஜெனிவாவில் வடக்கு மாகாணசபை உறுப்பினர்கள் சமர்ப்பிக்கும் பிரேரணைகளோ, கருத்துக்களோ தமிழ் மக்களின் அதிக வாக்குகளைப் பெற்ற தலைமையின் ஒப்புதலைப் பெற்றதல்ல. ஐக்கிய நாடுகள் மனித உரிமை ஆணையகப் பிரதிநிதிகளுக்கும், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைமைகளுக்கும் கொழும்பில் நடைபெற்ற பேச்சுவார்த்தைகளே உத்தியோகபூர்வமானவையாகக் கருதப்படும்.
2015ஆம் ஆண்டு ஜெனிவாவில் இலங்கை அரசுக்கு எதிராக கொண்டுவரப்பட்ட பிரேரணையை, இலங்கை அரசாங்கம் முழுமையாக அமுல்படுத்துவதை வலியுறுத்தும் பிரேரணை ஒன்றை வடக்கு மாகாணசபை நிறைவேற்றியதை, ஐக்கிய நாடுகள் சபையின் மனித உரிமை பேரவையின் உப குழுக் கூட்டத்தில் சமர்ப்பிப்பதற்கே மாகாணசபையின் உறுப்பினர்கள் ஜெனிவா சென்றிருக்கின்றனர்.
இந்த அழுத்தம் மனித உரிமை பேரவைக்கோ,பேரவையில் அங்கத்துவம் பெறுகின்ற உறுப்பு நாடுகளுக்கோ கவனத்தை ஈர்ப்பதாக அமையவில்லை. அங்கே கூட்டமைப்பின் தலைமைகளான சம்மந்தன் அல்லது சுமந்திரன் போன்றோர் பிரசன்னமாகி இருந்து, சட்ட நுணுக்கங்களுடனும்,இராஜதந்திர மொழி ஆளுமையுடனும் தமிழ் மக்கள் சார்ந்த கருத்துக்களை முன்வைத்திருந்தால் அது உறுப்பு நாடுகளுக்கு இலங்கைத் தமிழர்களின் நியாயக் கோரிக்கையை வலியுறுத்தியதாக இருந்திருக்கும்.
தமிழர்களின் சார்பில் மனித உரிமைப் பேரவையின் உறுப்பு நாடுகளின் கவனத்தை ஈர்க்கும் பிரதிநிதிகள் எவரும் ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையின் உப குழுக் கூட்டங்களில் கலந்து கொள்ளவில்லை.ஆனால் இலங்கை அரசாங்கம் மிகவும் தந்திரோபாயமாக மனித உரிமைப் பேரவையை கையாண்டு அதில் எதிர்பார்த்த வெற்றியையும் பெற்றுக்கொண்டுள்ளது.
அதாவது மனித உரிமைப் பேரவைக்கும், உறுப்பு நாடுகளுக்கும் தீணிபோடக்கூடிய பேச்சாளர்களையும், மனித உரிமைச் செயற்பாட்டாளர்களையும் அரசாங்கமே ஜெனிவாவுக்கு அனுப்பி வைத்துள்ளது. அவர்கள் அங்கே, இலங்கையில் மனித உரிமைகள் தொடர்பாகவும், தேசிய நல்லிணக்கம் தொடர்பாகவும், நம்பகத்தகுந்த சட்டப்பொறிமுறை தொடர்பாகவும் இலங்கை அரசு இன்னும் அதிகமாக செயற்பட வேண்டியுள்ளது என்றெல்லாம் வழமைபோல் கதை அளந்தாலும், இறுதியில் அடையாளங்காணக்கூடிய குறைபாடுகளை திருத்தவும்,முன்னொக்கிச் செல்லவும் இலங்கைக்கு கால அவகாசம் தேவை என்பதை தாம் ஏற்றுக்கொள்வதாகவும் கூறியே தமது வியாக்கியானங்களை நிறைவு செய்துள்ளனர்.
அரசாங்கம் அனுப்பியவர்கள் அரசாங்கத்தை விமர்சிப்பவர்களாகவும், அரசாங்கம் இன்னும் நிறையவே செய்ய வேண்டும் என்று ஆலோசனை செய்கின்றவர்களாகவும் இருப்பதை பொதுவாக உறுப்பு நாடுகள், நியாயமான பரிந்துரையாக ஏற்றுக்கொள்ளவும்,கால அவகாசம் ஒன்று கொடுக்கப்பட வேண்டும் என்ற இலங்கை அரசாங்கத்தின் வேண்டுகோளை ஏற்றுக்கொள்வதாகவும் நிலைமை மாற்றியமைக்கப்படடது.
இலங்கை அரசாங்கம் தன்னைப் பாதுகாத்துக்கொள்வதற்கு எடுத்துக் கொண்டுள்ள அக்கறையில் ஒரு விகித முயற்சியைக் கூட தமிழர் தரப்பு தமது நியாயங்களை சர்வதேச சமூகத்திற்கு எடுத்தியம்புவதற்கு எடுத்துக்கொள்ளவில்லை என்பதுதான் தமிழ் இனத்தின் இன்றை பரிதாப நிலைமையாகும்.
ஐக்கிய நாடுகள் சபையில் மனித உரிமைகள் பேரவையில் தமிழர்களுக்கு நியாயம் கேட்டுப் போராட்டம், இலங்கையில் தமிழ் பட்டதாரிகள், முன்னாள் போராளிகள், பாடசாலையிலிருந்து இடை விலகியவர்களின் தொழில் முயற்சிக்கான போராட்டம், காணாமல் போன உறவுகளைத் தேடி நடத்தப்படும் போராட்டம்,பூர்வீகமாக தாம் வாழ்ந்த நிலங்களைவிட்டு படையினர் வெளியேற வேண்டுமென நடத்தப்படும் தொடர் போராட்டங்கள் என தமிழ் மக்கள் தமது வாழ்க்கையை நகர்த்திக் கொண்டு இருக்கையில்,போராடுகின்ற எந்தத் தரப்பையும் தமிழ் மக்களின் தலைவர் என்று கருதப்படும் எதிர்க்கட்சித் தலைவர் சம்மந்தன் இன்னும் நேரடியாகச் சென்று பார்வையிடவில்லையே.
இதுவே திறப்பு விழாக்களாக இருந்தால், கலை நிகழ்வுகளாக இருந்தால் பொன்னாடைக்கும், மாலைக்கும் எத்தனை தலைகள் நீண்டிருக்கும் என்பதுதான் போராடும் மக்களின் கேள்வியாக இருக்கின்றது.
தமிழ்மக்கள் இன்னும் நம்புகின்ற ‘தமிழ்த் தேசியம்’ எனும் கவசம் அரசியல் தலைமைகளுக்கு பாதுகாப்பையும், பதவிகளையும் பெற்றுக்கொடுத்திருப்பது மட்டுமல்லாமல்,அக்கறையீனத்தையும், அசமந்தப் போக்கையும் சேர்த்தே வளர்த்துவிட்டுள்ளது.பிரச்சினைகளுக்கு தீர்வைப்பெற்றுத் தராத வெற்று வாசமாகவே தமிழ்த் தேசியம் இன்று கொழும்பில் முடங்கிக் கிடக்கின்றது.
இவ்வாறானதொரு விரக்தி நிலைக்கு தமிழ் மக்கள் தள்ளப்படுவதை எதிர்க்கட்சித் தலைவர் சம்மந்தன் உட்பட தமிழ்த் தேசியக் கூட்டமைப்பிலுள்ள அனைவரும் தடுத்து நிறுத்தவேண்டும். தமிழ்த் தேசியத்தையும், தமிழர் ஒற்றுமையையும் மதித்தே தமிழ்மக்கள் வாக்களித்திருக்கின்றார்களே தவிர,தனி நபர்களை ஆராய்ந்து தமிழ்மக்கள் வாக்களிக்கவில்லை.
தமக்கு வாக்களித்த மக்களுக்காக, சிங்களத் தலைமைகளும், முஸ்லிம் தலைமைகளும் செயற்படுகின்ற அளவுக்கு, தமிழ்த் தலைமைகள் மக்கள் நேசிப்போடு செயலாற்றவில்லை என்ற குற்றச்சாட்டை மறுத்தொதுக்க முடியாது. தம்மை விட்டால் தமிழ்மக்களுக்கு வேறு வழியில்லை என்ற நிலைப்பாடே, தமிழ்த் தலைமைகள் தேர்தல் முடிவோடு மக்களை மறந்துவிடுகின்ற அவலத்துக் காரணமாகும்.