அமெரிக்காவின் புதிய சுகாதார சட்டமூலம் தோல்வியடைந்தமைக்கு முக்கிய காரணம் ஜனநாயகக் கட்சியினரே என ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் தெரிவித்துள்ளார்.
குறித்த புதிய சட்டமூலம் வெற்றியடைவதற்கு போதிய ஆதரவு கிடைக்கவில்லை எனவும் அதனால் அது நேற்று (வெள்ளிக்கிழமை) வாபஸ் பெறப்பட்டது எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இவ்விடயம் தொடர்பில் கருத்து தெரிவித்த ட்ரம்ப், “புதிதாக பரிந்துரை செய்யப்பட்ட குறித்த சுகாதார சட்டமூலத்திற்கு ஆதரவாக ஜனநாயகக் கட்சியினரிடம் இருந்து ஒரு வாக்கு கூட கிடைக்கவில்லை” என தெரிவித்தார்.
இது குறித்து கருத்து தெரிவித்த நாடாளுமன்ற சபாநாயகர் போல் ரயன் (Paul Ryan), “புதிய சுகாதார சட்டமூலத்திற்கு ஜனநாயகக் கட்சியினரிடம் இருந்து 215 வாக்குகள் கிடைக்கப்பெறாது என அறிந்துகொண்டதைத் தொடர்ந்து அதனை வாபஸ் பெற தீர்மானித்தோம்” என தெரிவித்துள்ளார்.
அமெரிக்காவின் முன்னாள் ஜனாதிபதி பராக் ஒபாமாவினால் உருவாக்கப்பட்ட சுகாதார காப்பீட்டு சட்டமூலத்தினை மாற்றியமைப்பதாக ஏற்கனவே ட்ரம்ப் அறிவித்திருந்த நிலையிலேயே குறித்த புதிய சட்டமூலத்தை ட்ரம்ப் பரிந்துரை செய்தமை குறிப்பிடத்தக்கது.