Loading...
இலங்கையின் வடக்கு மாகாண முதலமைச்சர் விக்கினேசுவரனின் முடிவால்தான் ரஜினிகாந்தின் பயணம் ரத்துசெய்யப்பட்டுள்ளது.
இலங்கையில் ஈழத்தமிழர் தாயகப் பகுதியில் உள்ள யாழ்ப்பாணம் மாவட்டம் மருதங்கேணி, வடமராட்சி கிழக்கு, வவுனியா (மாவட்டம்) ஆகிய இடங்களில், காணாமலடிக்கப்பட்ட உறவுகளை மீட்டுத்தரக் கோரியும் இறுதிப்போர் நடந்த பகுதியான முல்லைத்தீவு மாவட்டம் கேப்பாப்புலவுவில் சொந்த ஊரில் குடியேறாமல் குடில்களில் வாழும் ஈழத்தமிழ் மக்கள் போராடிக்கொண்டு இருக்கிறார்கள். அரசியல் கட்சிகளின் தலைமையில்லாமல் பாதிக்கப்பட்ட மக்களே தம்முயற்சியாக நடத்தும் இந்தப் போராட்டம் சில வாரங்களாக நீடித்துவருகிறது.
ஒன்றரை ஆண்டுகளுக்கு முன்னர் இலங்கை அரசு கொடுத்த உறுதிமொழிக்கு உட்பட்டதுதான், இந்தப் போராட்டங்களின் முக்கிய கோரிக்கைகள் எனும் நிலையில், ஐநா மனிதவுரிமைப் பேரவையின் கூட்டத்தொடரில் இந்த வாரம் விவாதிக்கப்பட்டது. அதையொட்டியும் ஈழத்தமிழ் மக்களின் போராட்டத்துக்கு அங்குள்ள கட்சிகளின் நாடாளுமன்ற உறுப்பினர்களும் ஆதரவு தெரிவித்தனர். கட்சிகளின் தலைவர்களும் போராட்டக் களங்களில் மக்களோடு நின்றுகொள்ளவும் செய்தனர். இப்படியாக போராட்டத்துக்கு ஆதரவு பெருகிவந்த நிலையில், சிங்கள இனவாத இலங்கை அரசு அதை ஒடுக்குவதற்கான நடவடிக்கைகளிலும் இறங்கியது.
திடீரென முந்தைய இலங்கை அரசதிபர் ராஜபக்சே குடும்பத்துக்கு நெருக்கமான சுபாஷ்கரணின் லைக்கா திரைப்பட நிறுவனம் சார்பில், வீடு கட்டித் திறப்பு விழா என அறிவிக்கப்பட்டு, அவசர ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டன. இதில் வடக்கு இலங்கை மாகாண முதலமைச்சர் விக்கினேசுவரனும் கலந்துகொள்வார் என அறிவிக்கப்பட்டது. ஆனால் விக்கினேசுவரனோ போராடிவரும் மக்களுக்கு நீதி கிடைக்காத சூழலில் மக்களின் மனநிலைக்கு எதிரான நிகழ்வில் பங்கேற்க மறுத்துவிட்டார்.
எப்படியாவது அவரை சமாளித்துவிடலாம் என அவரின் பெயர் குறிப்பிடப்பட்டதாகவும் அவருக்கு அதில் விருப்பமில்லை என்றும் ஒருவேளை ரஜினிகாந்த் இந்த நிகழ்வில் பங்கேற்றிருந்தாலும் முதலமைச்சர் விக்கினேசுவரன் அதைப் புறக்கணிக்க முடிவுசெய்திருந்தார்; அப்படி நடந்திருந்தால் அது ரஜினிகாந்த்துக்கு கெட்ட பெயரை ஏற்படுத்தும்; இந்த நிலையிலேயே, ரஜினியின் பயணம் ரத்துசெய்யப்பட்டுள்ளது என்றும் யாழ்ப்பாணத்து வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
இதற்கிடையில் ரஜினிகாந்த்தின் இந்தக் காலகட்டத்துப் பயணத்துக்கு விசிக, பாமக, த.வா.க. உட்பட்ட அரசியல் கட்சிகளும் பகிரங்கமாக எதிர்ப்பு தெரிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.
Loading...