முன்னாள் முதல்வர் ஜெயலலிதா மரணத்தில் உள்ள மர்மத்தை வெளியிட வேண்டும்; இரட்டை இலைச் சின்னம் இல்லாத அதிமுக.வில் தொடர விருப்பம் இல்லை’ எனச் சொல்லி, டிவி நடிகையும் அ.தி.மு.க முன்னாள் நட்சத்திரப் பேச்சாளருமான ஆர்த்தி, அந்தக் கட்சியிலிருந்து விலகிவிட்டார். ஜெயலலிதாவுடன் இருந்த தருணங்களை நம்மிடம் நெகிழ்வுடன் பகிர்ந்துகொண்டார்.
‘‘சினிமாவில் நம்பர் ஒன் நடிகையாக இருந்து, அரசியலில் பல சவால்களை எதிர்கொண்டு முதல்வரானவர் ஜெயலலிதா. நானும் ஒரு நடிகை என்ற அடிப்படையில், அவருடைய தன்னம்பிக்கை, விடாமுயற்சி, தைரியத்தைக் கண்டு வியந்திருக்கிறேன்.
அவர்தான் என் ரோல் மாடல். அதனால், 2014 மார்ச் 27-ல் அதிமுகவில் அடிப்படை உறுப்பினராக என்னை இணைத்துக்கொள்ள அவரைச் சந்தித்தேன். அப்போது, என்னுடைய நடிப்பு, நான் நடத்திய ரியாலிட்டி ஷோ பற்றிப் பேசியது ஆச்சரியமாக இருந்தது.
‘நட்சத்திர பேச்சாளராக நீ வர வேண்டும். உன்னால் அது முடியும்’ என உற்சாகப்படுத்தி அந்த அந்தஸ்தைக் கொடுத்தார். ‘பெண்களின் பிரச்னைகளைக் களைய, பெண்கள் அரசியலுக்கு வர வேண்டும். அதற்கான முயற்சியை நாம் முன்னெடுக்க வேண்டும்’ என அடிக்கடி கூறுவார்.
அதனால்தான், அவரது திட்டங்கள் அனைத்துமே அடிமட்ட பெண்களின் வாழ்வில் வசந்தத்தை உண்டாக்கும் வகையில் அமைந்திருந்தது.
ஜெயலலிதாவை இதுவரை மூன்று முறை நேரில் சந்தித்துப் பேசியிருக்கிறேன். என்னுடைய பிறந்தநாளன்று ஆசீர்வாதம் வாங்கச் சென்றேன். அப்போது, பி.எச்.டி.யில் நான் என்ன புராஜெக்ட் செய்கிறேன் எனக் கேட்டு அறிவுரைகள் கூறினார்.
அவருக்கு அனைத்துத் துறைகள் பற்றிய அறிவு உண்டு. என்னிடம் ஆங்கிலத்திலேயே பேசுவார். சில வார்த்தைகள் சரியாக நான் உச்சரிக்கவில்லை என்றால், சரிசெய்வார். ‘நீ நடிகையாக இருந்தாலும், உன் பெற்றோர் உன்னை ரெகுலர் கல்லூரியில் சேர்த்திருப்பது சந்தோஷமாக இருக்கிறது’ எனக் கூறியுள்ளார்.
‘நான் ஸ்டெல்லா மேரீஸ் கல்லூரியில் படிக்க ஆசைப்பட்டேன். ஆனால், அது நிறைவேறாத ஆசையாகிவிட்டது. இப்போது, தேர்தலில் ஓட்டுப்போட மட்டுமே ஸ்டெல்லா மேரீஸ்க்கு சென்றுவருகிறேன்’ எனச் சிரித்தார்.
இந்த ஐந்து வருடக் கல்லூரி வாழ்வு, உனக்கு கோல்டன் பீரியட். நல்ல வகையில் பயன்படுத்திக்கொள். எவ்வளவுதான் சொத்து இருந்தாலும், ஒரு பெண்ணுக்கு வீட்டில் கொடுக்கும் சொத்து, அழியாத கல்வி செல்வம்தான்’ எனக் கூறியுள்ளார்.
‘எந்தச் சூழலையும் தைரியமாக எதிர்கொள்ள வேண்டும். பொது இடங்களில் நம் பலவீனத்தைக் காட்டும் வகையில் அழக் கூடாது’ எனக் கூறியுள்ளார். கட்சியில் நடக்கும் அனைத்தும் அம்மாவுக்குத் தெரியும். ஒரு கட்டுப்பாடான மிலிட்டரி ஆர்மி மாதிரி கட்சியை வைத்திருந்தார்.
கட்சியில் உள்ள இளம் நட்சத்திரப் பேச்சாளர் நான்தான். தமிழகத்தின் மூலை முடுக்கு என அனைத்து இடத்துக்கும் போயிருக்கிறேன். 234 தொகுதிக்கும் போய் இருக்கிறேன். சென்ற இடங்களில் எல்லாம் பெருமையா இருந்தது.
என்ன பேசணும், என்ன மாதிரி பேசணும், யாரைப் பற்றி பேசணும் என அனைத்துமே பக்காவாக கொடுத்துருவாங்க. கூட்டிட்டு போறது, திரும்பவந்து டிராப் பண்றது என அனைத்துமே ஆர்கனைஸ்டா இருக்கும்.
சில இடங்களில் திமுக.வை திட்டிப் பேசும் சூழலிலும் மனசாட்சிபடியே பேசுவேன். அப்படி ஒரு சமயம், பிரச்னையாச்சு.
இதைக் கேள்விப்பட்ட ஜெயலலிதா, ‘ஆர்த்தி படிச்சப் பொண்ணு. அவங்க விருப்பப்படி பேசட்டும்’னு சுதந்திரம் தந்தாங்க. ஒருமுறை புலிக்குட்டிக்கு ஆர்த்தினு பெயர் வெச்சாங்க. கழகத்தில் ஆர்த்தி என்கிற பெயரில் நான் மட்டும்தான் இருக்கேன். ‘என்னை மனசுல வெச்சுதானே புலிக்குட்டிக்குப் பெயர் வெச்சீங்க’னு கேட்டேன். ஹா…ஹா… என அவங்க சிரிச்சது இப்பவும் என் கண்முன்னாடியே இருக்கு.
‘ஜங்க் ஃபுட் எல்லாம் அவாய்டு பண்ணு. குண்டா இருக்கிறது பிரச்னை. எவ்வளவு ஆரோக்கியமான சாப்பாடு சாப்பிடுறோம்ங்கறதுதான் முக்கியம்’னு சொல்லியிருக்காங்க” என்று மரும் நினைவுகளைச் சொல்லும்போது, மகிழ்ச்சியுடன் இருந்த ஆர்த்தி முகம், சட்டெனச் சோகமானது.
”அவருக்கு உடல்நிலை சரியில்லாமல் அப்பபோலோவில் இருந்தபோது, நல்லா இருக்காங்கனு சொல்லியே யாரையும் பார்க்க அனுமதிக்கலை.
‘அம்மாவுக்குப் பிடிக்காது; அதனால போட்டோ, வீடியோ வெளியிடலை’னு சொல்றவங்க. இப்போ அவருக்குப் பிடிக்காத எல்லாத்தையும் செய்யறாங்க. சின்னத்தையும் இழந்துட்டாங்க. அவங்க இருந்தப்போ, கால்ல விழுந்தவங்க எல்லாம், இறந்ததும் பிணத்தோடு செல்பி எடுத்துக்கிட்டாங்க. அதைப் பார்த்து அதிர்ச்சியா இருந்துச்சு. அவங்க உடம்பு பக்கத்தில் நின்னுக்கிட்டே சிரிக்கிறது. கதை பேசுறதுனு இருந்தாங்க.
ஜெயலலிதா பெரிய இரும்புப் பெண்மணி. இப்போ, ஆளாளுக்கு சமாதிக்குப் போய் தொந்தரவுப் பண்ணிட்டு இருக்காங்க. தியானம் பண்றேனு நாடகம் போடுறாங்க. அப்படி நடிச்சவங்களில் ஒருத்தர் ஜெயிலுக்குப் போயிட்டாங்க. ஒருத்தர் பதவி இழந்துட்டாரு. இன்னொருத்தர் சின்னத்தை இழந்துட்டாரு.
தீபா ஒரு கட்சி; கணவர் ஒரு கட்சினு பிரிஞ்சிட்டாங்க. தாயின் கனவை நிறைவேற்றக் குடும்பம் ஒண்ணு சேரணும். ஒற்றுமையா இருக்கணும். இங்கே பதவி, புகழுக்காக ஒருத்தருக்கு ஒருத்தர் சண்டைப் போட்டுக்கறாங்க.
புரட்சித் தலைவர், புரட்சித் தலைவி கட்டிக்காத்த சின்னத்தை இழந்து நிக்கிறாங்க. ‘பதவிதான் குறிக்கோள். தொப்பியைக் கொடுங்க போட்டுக்கிறோம். மின்கம்பம் கொடுங்க வாங்கிக்கறோம்னு’ இறங்கிப் போய்ட்டாங்க.
சின்னத்தைக் காப்பாற்றக்கூட ஒன்றிணையாதது வேதனையா இருக்கு. இந்தச் சூழல்ல கட்சியில் இருக்க விரும்பலை. அதனால்தான் விலகிட்டேன். சினிமாவிலும் டிவியிலும்தான் நான் நடிக்கிறேன். மக்கள் முன்னாடி நடிக்க விரும்பலை” என்றார் ஆதங்கத்துடன்.