பசில் ராஜபக்சவே தனது அரசியல் வாழ்க்கையை சிக்கலாக்கியதாகவும் கோத்தபாய ராஜபக்ச தன்னுடன் இருந்தவர்களுக்கு தொந்தரவு கொடுத்ததாகவும் முன்னாள் அமைச்சர் மேர்வின் சில்வா தெரிவித்துள்ளார்.
சிங்கள வார பத்திரிகை ஒன்றுக்கு வழங்கிய நேர்காணலில் அவர் இதனை கூறியுள்ளார்.
கடந்த பொதுத் தேர்தலில் போட்டியிடும் சந்தர்ப்பத்தை பெற்றுக்கொள்ள முன்னாள் அமைச்சர் பீலிக்ஸ் பெரேரா தன்னை பசில் ராஜபக்சவிடம் அழைத்துச் செல்ல முயற்சித்ததாகவும் அதனை தான் நிராகரித்ததாகவும் மேர்வின் குறிப்பிட்டுள்ளார்.
நான் மகிந்த ராஜபக்சவின் சகோதரர்களை திட்டினேன். தவறு செய்தவர்களை திட்டாது, வெள்ளை சுண்ணாம்பு பூசவா சொல்கிறீர்கள்?.
பசில் ராஜபக்ச எனது முழு அரசியல் வாழ்க்கையையும் சிக்கலுக்கு உள்ளாகினார். கோத்தபாய என்னோடு இருந்தவர்களுக்கு தொந்தரவு கொடுத்தார். மகிந்தவே அவர்களை காப்பாற்றினார் என மேர்வின் சில்வா குறிப்பிட்டுள்ளார்.
எது எப்படி இருந்த போதிலும் கடந்த பொதுத் தேர்தலின் பின்னர், சில சாட்சிய ஆவணங்களுடன் குற்றப் புலனாய்வு திணைக்களத்திற்கு சென்றிருந்த மேர்வின் சில்வா, வெள்ளை வான் கடத்தல் சம்பவங்கள் குறித்து முறைப்பாடு ஒன்றை செய்திருந்தார்.