நடிகர் ரஜனிகாந்தின் வடக்கு விஜயத்தை அரசியலாக்கி ஏழைகளின் எதிர்ப்பார்ப்பிலும், நம்பிக்கையிலும் ஏமாற்றத்தை விதைத்துள்ளார்கள் என நாடாளுமன்ற உறுப்பினர் அங்கஜன் ராமநாதன் தெரிவித்துள்ளார்.
தனது ஊடக அறிக்கையிலேயே அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.
குறித்த ஊடக அறிக்கையில்,
அடுத்த மாதம் 9 ஆம் திகதி நடிகர் ரஜனிகாந்த் இலங்கையின் வடக்கிற்கு விஜயம் ஒன்றை மேற்கொண்டு போரினால் பாதிக்கப்பட்ட வறுமைக்கோட்டின் கீழ் வாழ்ந்து வரும் மக்களுக்கான ஈழத்தமிழரான “லைக்கா” நிறுவன நிர்வாகியால் அமைக்கப்பட்ட வீடுகளை கையளிப்பதாக இருந்தது.
இருப்பினும் திடீரென ராஜனிகாந்தின் வடக்கு விஜயத்தை சிலர் அரசியலாக்கி வெய்யிலிலும், மழையிலும் குமர்ப்பிள்ளைகளுடன் பாதுகாப்பற்ற வீட்டில் வாழ்ந்து வரும் ஏழைகளின் எதிர்பார்ப்பிலும் நம்பிக்கையிலும் ஏமாற்றத்தை விதைத்துள்ளார்கள்.
வடக்கில் வாழும் தமிழ் மக்களில் ஏராளமானவர்கள் இன்னமும் போர் தந்த வடுக்களில் இருந்து மீளவில்லை. அதீத வெப்பமும் அதீத மழையும் பொழியும் சீரற்ற காலநிலையில் பாதுகாப்பற்ற வீடுகளில் வெயிலையும் மழையையும் ஏற்றுக்கொண்டு ஆதிவாசிகள் போல வாழும் விதியில் தான் இன்னமும் வாழ்ந்து கொண்டிருக்கின்றார்கள்.
இந்த நிலையில் ஈழத்தை சேர்ந்த புலம்பெயர் மனிதர்கள் சிலரினால் இதற்கு முன்னரும் இதேபோன்ற வீட்டு தொகுதிகள் எம் மக்களுக்காக வழங்கப்பட்டன. நல்ல மனிதர்களின் சேவைகளை காட்டிலும் வடக்கில் மக்கள் தேவைகள் பன்மடங்காகவே இருக்கின்றன.
இந்த நிலையில் சொல்லக்கூடிய காரணங்கள் ஏதுமின்றி நடிகர் ரஜனிகாந்த்தின் வருகையை திடீரென சிலர் அரசியலாக்கியமை இந்த ஈழத்து ஏழை மக்களுக்கான வாய்ப்புக்களில் ஒன்றை நழுவவிட்டதாகவே கருதுகிறேன்.
லைக்கா நிறுவன நிர்வாகி ஒரு ஈழத்தமிழர் .அவர் தனது முதலீட்டினை இந்தியாவிலும் செய்துள்ளார். அதில் கிடைக்கும் பணத்தை கொடிய போரினால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு பயன்படுத்துவதே பொருத்தமானது.
ஆனால் ஈழத்தமிழன் ஈழத்தமிழர்களுக்கு உதவமுடியாத நிலை ஏற்படுத்தப்பட்டுள்ளது. இதை அரசியலாக்கும் முன்னர் இங்கு நடந்த போரினையும் அதனால் வரலாற்று பதிவும் சிறப்பும் மிக்க தமிழினம் தன் அடையாளங்களை இழந்து வாழ நிரந்தர வீடுகள் இல்லாமலும் தமது காணிகள் தமக்கு கிடைக்காமலும் நாடோடிகளாய் வாழ்வதை சிந்தித்திருக்க வேண்டும்.
எல்லோருமாக சேர்ந்து அழித்த ஈழத்தமிழர்களை எல்லோருமாக சேர்ந்து தான் மீளவும் உருவாக்க வேண்டும். திட்டமிட்டது போல நடிகர் ரஜனிகாந்த் வடகிற்கு விஜயம் மேற்கொண்டிருந்தால் எமது ஜனாதிபதியையும் வடக்கு முதல்வரையும் அவர் சந்தித்திருப்பார். அவர்கள் அவருக்கு எமது மக்களின் நிலைப்பாட்டினை நிச்சயமாக நேரடியாகவே உணர்த்தியிருப்பார்.
அதனால் எமது நிலத்தில் எமதுமக்கள் தொழில் மற்றும் வெளிநாட்டு கல்வி வாய்ப்புக்களை பெறவும் ஒரு பெரிய வாய்ப்பாக அது அமைந்திருக்கும். ரஜனிகாந்தின் வழியினை பின்பற்றி அல்லது அவரது வேண்டுகோளுக்கிணங்க இன்னும் பலர் எமக்கு உதவ முன்வந்திருப்பார்கள்.
ஆகவே இவற்றையெல்லாம் மனதில் நிறுத்தி இன்னுமொரு முறை ரஜனிகாந்தின் வருகையை யாரும் அரசியலாக்கி எம் ஏழை மக்களின் வாழ்வியலோடு விளையாட வேண்டாம் என தயவுடன் கேட்டுக்கொள்கின்றேன் என அவ்வறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.