60வருட ரஷ்ய இலங்கை நட்புறவை மேலும் 100 வருடங்களுக்கு முன்னெடுத்துச் செல்லும் வகையில் மேலும் வளர்த்துக்கொண்டு இலங்கை தாய்நாட்டுக்குத் தேவையான பல்வேறு அபிவிருத்தி நன்மைகளைப் பெற்றுக்கொண்டு ரஷ்யாவுக்கான மூன்று நாள் உத்தியோகபூர்வ விஜயத்தை வெற்றிகரமாக முடித்துக்கொண்டு ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேன நேற்று நாடு திரும்பினார்.
43 வருடங்களுக்குப் பின்னர் இலங்கை அரச தலைவர் ஒருவர் ரஷ்யாவுக்கு மேற்கொண்ட உத்தியோகபூர்வ விஜயம் இதுவாகும். ரஷ்ய ஜனாதிபதி விலாடிமிர் புடினின் விசேட அழைப்பின் பேரில் இந்த விஜயத்தை மேற்கொண்ட ஜனாதிபதிக்கு கிரம்ளின் மாளிகையில் ரஷ்ய ஜனாதிபதி விலாடிமிர் புடினால் பலத்த வரவேற்பு வழங்கப்பட்டது.
இச்சந்திப்பின் போது இலங்கையின் கல்வி, விவசாயம்,சுற்றுலா, கைத்தொழில், மின்சக்தி தேசிய மற்றும் பிராந்திய பாதுகாப்பு தொடர்பில் ரஷ்ய ஜனாதிபதி விசேட கவனம்செலுத்தினார். சுமார் இரண்டு மணித்தியாலத்திற்கும் அதிக நேரம் இடம்பெற்ற இக்கலந்துரையாடலின் மூலம் இலங்கைக்கு எதிர்காலத்தில் பல்வேறு நன்மைகள் கிடைக்கவுள்ளன.
ரஷ்ய ஜனாதிபதி புடின் ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேனவிற்கு ஒரு வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த நினைவுப் பரிசையும் ஏற்பாடுசெய்திருந்தமை குறிப்பிடத்தக்கது.
ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேனவிற்கும் ரஷ்ய பிரதமர் திமித்ரி மெத்வதேவிற்கும் இடையிலான இருதரப்பு கலந்துரையாடலில் இலங்கைக்கு நன்மைபயக்கும் பல்வேறு விடயங்கள் குறித்து கலந்துரையாடப்பட்டது.
இலங்கைக்கும் ரஷ்யாவுக்கும் இடையிலான இருதரப்பு உறவுகளுக்கு 60 ஆண்டுகள் நிறைவடைவதை முன்னிட்டு ஒரு விசேட நிகழ்வு ரஷ்யாவின் Ritz Carlton ஹோட்டலில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேன இந்நிகழ்வில் பிரதம அதிதியாக கலந்துகொண்டார்.
ரஷ்யாவில் பல்வேறு துறைகளில் பணியாற்றும் தொழில்வாண்மையாளர்கள், மாணவர்கள், வர்த்தகர்கள் உள்ளிட்ட இலங்கையர்களுடனான சந்திப்பில் கலந்தகொண்ட ஜனாதிபதி, அரசாங்கம் முன்னெடுத்துவரும் நிகழ்ச்சித்திட்டங்கள் பற்றி விளக்கினார்.
ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேன உள்ளிட்ட தற்போதைய அரசாங்கம் சர்வதேச ரீதியாக பின்பற்றும் கொள்கைகளுக்கு கிடைத்த சிறந்த அங்கீகாரமாக ஜனாதிபதியின் இந்த மூன்று நாள் உத்தியோகபூர்வ விஜயம் அமைந்திருந்தது எனக் குறிப்பிடமுடியும். ஜனாதிபதி மேற்கு சார்பு வெளியுறவுக் கொள்கையை பின்பற்றுவதாக முன்வைக்கப்படும் குற்றச்சாட்டுக்களை மறுக்கும் வகையில் அமைந்திருந்த இந்த விஜயம் மிக விரைவில் நாட்டுக்கு பல்வேறு நன்மைகளை கொண்டுவரும்.
அமைச்சர்களான மங்களசமரவீர, எஸ்.பீ.நாவின்ன, மகிந்தசமரசிங்க, சுசில்பிரேமஜயந்த, ஜோன்அமரதுங்க, தயாசிறிஜயசேகர, பிரதிஅமைச்சர் அருந்திகபெர்ணான்டோ, ஆகியோரும் நிகழ்வில் ஜனாதிபதியுடன் இப்பயணத்தில் இணைந்துகொண்டிருந்தனர்.