யாழ்ப்பாணத்திற்கு நான் மீண்டும் வரும்போது காணிகளை இழந்த மக்களுக்கு நல்லதொரு முடிவுடனேயே வருவேன் என தேசிய ஒருமைப்பாட்டுக்கும் நல்லிணக்கத்துக்குமான அலுவலகத்தின் தலைவியும் முன்னாள் ஜனாதிபதியுமான சந்திரிகா குமாரதுங்க தெரிவித்தார்.
நேற்றைய தினம் யாழ்ப்பாணத்திற்கு விஜயம் செய்திருந்த முன்னாள் ஜனாதிபதி, தெல்லிப்பழை பிரதேச செயலக பிரிவில் உள்ள பளை வீமன்காமம் பகுதியில் ஆரம்ப சுகாதார நிலையத்திற்கான அடிக்கல்லை நாட்டி வைத்த பின்னர் அங்கு உரையாற்றிய போதே மேற்கண்டவாறு தெரிவித்தார்.
குறித்த விடயம் தொடர்பில் மக்கள் கருத்து தெரிவிக்கையில்,
30 வருட காலமாக எமது வாழ்விடங்கள் விடுவிக்கப்படவில்லை. நாங்கள் அகதி முகாம்களிலும் வாடகை வீடுகளிலும் தங்கியுள்ளோம்.
இந்தநிலையில் தான் எங்கள் இடங்களில் அபிவிருத்தி நடைபெறுகிறது. நாம் சொந்த இடத்தில் மீள்குடியேற முடியாத நிலையில் அபிவிருத்தி எதற்கு? எமது சொந்தக் காணிகள் எங்கள் மூதாதையர்கள் பிறந்த எங்கள் காணிகள் எமக்கு வேண்டும்.
இந்தக் கோரிக்கையை கடந்த 3 தசாப்த காலமாக முன்வைத்து வருகின்றோம். ஆனாலும் எமது கோரிக்கையை எந்த அரச தலைவர்களும் கண்டுகொள்ளவில்லை.
புதிய அரசாங்கத்தின் கீழ் ஓரளவு காணிகள் விடுவிக்கப்பட்டாலும் பூரணமாக எங்களுடைய காணிகள் விடுவிக்கப்படவில்லை. மயிலிட்டியில் இதுவரை ஒரு துண்டு காணியும் விடுவிக்கப்படவில்லை.
இதனால் எமது காணிகளை பார்க்க முடியாத நிலையும் உள்ளது. எமது காணிகளை விடுவிப்பதற்காக ஜனாதிபதி பல தடவைகள் உறுதிமொழிகளை வழங்கியிருந்த போதிலும் அவற்றை நிறைவேற்றத் தவறிவிட்டார்.
ஜனாதிபதி எம்மை ஏமாற்றிய நிலையில் நீங்கள் தான் எமது காணிகளை விடுவிப்பதற்கு நடவடிக்கை எடுக்க வேண்டும்.
நாங்கள் தெல்லிப்பளை வைத்திய சாலைக்கு செல்ல வேண்டுமானால் 20 கி.மீ தூரம் சுற்றிவர வேண்டியுள்ளது. எமது காணிகளும், வீதிகளும் விடுவிக்கப்பட்டால் சில கி.மீ. தூரத்தில் தெல்லிப்பளை வைத்தியசாலையை சென்றடைந்து விடலாம்.
நாங்கள் மீள்குடியேற முடியாமைக்கு இராணுவத்தினரே காரணம். அவர்கள் தான் எமது நிலத்தை பறித்து வைத்துள்ளார்கள் என அப்பகுதி மக்கள் முன்னாள் ஜனாதிபதி சந்திரிகாவிடம் தெரிவித்தனர்.
இதற்குப் பதிலளித்த சந்திரிகா, போரின் போது படையினர் வசமிருந்த பெரும்பாலான காணிகள் தற்போது விடுவிக்கப்பட்டுள்ளன. எனினும் மக்களுடைய காணிகளை வழங்குவதற்கு நல்லிணக்க அரசாங்கம் நடவடிக்கை எடுத்து வருகிறது என்றார்.
மேலும் இராணுவத்தினர் வசமுள்ள காணிகளின் விபரங்களையும் கேட்டறிந்து அடுத்த முறை யாழ்ப்பாணத்திற்கு வரும்போது நல்ல செய்தியுடன் வருவதாகவும் உறுதியளித்தார்.