தமிழீழ விடுதலைப் புலிகளின் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரன்தோற்கடிக்கப்பட்டதற்காக, மஹிந்த ராஜபக்ச அரசாங்கத்தை தமிழ் மக்கள் பழிவாங்கி விட்டதாக முன்னாள் பாதுகாப்பு செயலாளர் கோத்தபாய ராஜபக்ச தெரிவித்துள்ளார்.
கொழும்பின் வார இறுதிப் பத்திரிகையொன்றுக்கு வழங்கிய நேர்காணலில் அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.
அவர் மேலும் கூறுகையில்,
போர் வெற்றியின் முக்கியத்துவத்தை மக்கள் புரிந்து கொள்ளத் தவறியுள்ளனர்.
சில நபர்கள் கூறிய பொய்களை கேட்டு ஏமாந்த மக்கள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்சவை தோற்கடித்தனர்.
சிறுபான்மை மக்களின் வாக்குகள் கிடைக்காத காரணத்தினால் மஹிந்த தோற்றதாக கூறப்படும் கருத்தை நான் ஏற்கவில்லை.தேர்தல் முடிவுகளை நன்றாக ஆய்வு செய்தால் இந்த விடயத்தை புரிந்து கொள்ள முடியும்.
பெரும்பான்மை மக்கள் வாக்களிக்காத காரணத்தினாலேயே மஹிந்த தோல்வியடைந்தார்.
குறிப்பாக கொழும்பு மற்றும் மக்கள் செறிவான பகுதிகளில் சிங்கள மக்கள் அதிகளவில் மஹிந்தவை நிராகரித்தனர்.
முஸ்லிம் மக்கள் அன்று மஹிந்தவை வெறுப்பதற்கு ஓர் காரணம் இருந்தது, பொதுபல சேனா நடவடிக்கைகளினால் அவர்கள் மஹிந்தவை நிராகரித்தனர்.
பிரபாகரன் தோற்கடிக்கப்பட்ட காரணத்தினால் தமிழ் மக்கள் மஹிந்த மீது குரோதம் கொண்டிருந்தனர்.
இந்த குரோத உணர்வு எவ்வளவு அதிகம் என்றால், இராணுவத் தளபதியான சரத் பொன்சேகாவிற்கு 2010ம் ஆண்டில் தமிழ் மக்கள் ஆதரவளித்திருந்தனர்.
பொய்ப்பிரச்சாரங்களைக் கண்டு ஏமாந்து மக்கள் தமக்கு கிடைத்திருக்கும் சுதந்திரத்தை மறந்து விட்டார்கள்.
ஆட்சி மாற்றத்தை ஏற்படுத்திய அனைவரும் தற்போது மனம் வருந்துகின்றார்கள்.
லசந்த கொலை விசாரணைகளை தடுக்க வேண்டுமென நான் ஒரு போதும் முயற்சிக்கவில்லை என கோத்தபாய ராஜபக்ச தெரிவித்துள்ளார்.